ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்

கறம்பக்குடி, கந்தர்வகோட்டையில் ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்பு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

Update: 2023-04-16 18:37 GMT

அனுமதி

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில் உச்சநீதிமன்றம் 47 இடங்களில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஊர்வலம் செல்ல அனுமதி வழங்கும்படி தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 12 கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிபந்தனையுடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதன்படி புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் குறிப்பிட்ட வழித்தடங்களில் ஊர்வலம் செல்ல அனுமதி கேட்டு கறம்பக்குடி போலீசில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் ஊர்வலம் செல்ல அனுமதி மறுத்த போலீசார் மாற்றுபாதையில் செல்ல அனுமதி வழங்கினர். இதைதொடர்ந்து ஊர்வலம் செல்லும் பாதையை திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர், புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே ஆகியோர் நேற்று முன்தினம் ஆய்வு செய்து போலீசாருக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்தனர்.

ஊர்வலம்

கறம்பக்குடியில் முதல்முறையாக ஆர்.எஸ்.எஸ்.ஊர்வலம் நடப்பதால் நேற்று காலை முதல் நகர பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடைவீதி, பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நகர எல்லையில் வாகன சோதனையும் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கார் மற்றும் வேன்களில் வந்த ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் மற்றும் பா.ஜ.க. இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் கறம்பக்குடி தென்னகர் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் நுழைவு வாயில் முன்பு திரண்டனர்.

சரியாக 5 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். மாவட்ட இணை செயலாளர் கணபதிராஜா தலைமையில் ஊர்வலம் தொடங்கியது. வெள்ளை சட்டை, காக்கி பேன்ட், தொப்பி அணிந்த சேவகர்கள் மிடுக்குடன் அணி வகுத்து சென்றனர். இந்த ஊர்வலம் தென்னகர் பகுதியில் தொடங்கி நெய்வேலி ரோடு, சீனி கடைமுக்கம், புதுக்கோட்டை சாலைவழியாக கருப்பர் கோவில் வரை சென்று திரும்பி பின்னர் முருகன் கோவில் அருகே நிறைவடைந்தது. தொடர்ந்து அங்கு உறுதிமொழி எடுக்கப்பட்டு பொதுக் கூட்டம் நடந்தது. இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் பேசினார்கள்.

பாதுகாப்பு

ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பிரதான சாலையில் ஊர்வலம் நடைபெற்றதால் 3 மணிநேரம் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். ஊர்வல பாதையில் பொதுமக்கள் நடந்து செல்லக்கூட அனுமதிக்கப்படவில்லை. வீதிகள் அனைத்தும் தடுப்பு கட்டைகள் அமைத்து மூடப்பட்டன. கோவில், கிறிஸ்தவ ஆலயம், மசூதி, தலைவர்கள் சிலைகளுக்கு அருகே அதிரடி படை போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

கந்தர்வகோட்டை

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் கந்தர்வகோட்டை வெள்ள முனியன் கோவில் திடலில் நடைபெற்றது. முன்னதாக கந்தர்வகோட்டை தனியார் திருமண மண்டபத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கறம்பக்குடி சாலை, செட்டியார் தெரு, பெரிய கடை வீதி, புதுக்கோட்டை நெடுஞ்சாலை, பட்டுக்கோட்டை சாலை வழியாக வெள்ள முனியன் கோவில் திடலை வந்து அடைந்தது. பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பங்கேற்றனர். இதையடுத்து அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ வேண்டும். அனைத்து மக்களும் தேசபக்தியுடன் இருக்க வேண்டும். தேசத்திற்காக உயிர் தியாகம் செய்ய எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனர். இந்த ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்