பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ரூ.78 லட்சம் உண்டியல் காணிக்கை
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ரூ.78 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்டது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில், பக்தர்கள் காணிக்கை செலுத்த 20 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் மாதம் தோறும் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படும். இந்த மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.
கோவில் செயல் அலுவலர் மேனகா, பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறையின் சத்தியமங்கலம் ஆய்வாளர் சிவமணி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. 20 உண்டியல்களிலும் சேர்த்து 78 லட்சத்து 19 ஆயிரத்து 284 ரூபாய் இருந்தது. மேலும் 360 கிராம் தங்கம், 754 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். பள்ளிக்கூட மாணவிகள், பக்தர்கள், வங்கி அலுவலர்கள் பரம்பரை அறங்காவலர்கள் புருஷோத்தமன், ராஜாமணி தங்கவேல், அமுதா, கண்காணிப்பாளர் பாலசுந்தரி உள்ளிட்டோர் இந்த பணியில் பங்கேற்றனர்.