நெல் குவிண்டாலுக்கு ரூ.700 வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் சுமார் 30 லட்சம் டன் அளவுக்கு மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-21 07:20 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தெலுங்கானா மாநிலத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.500 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா உழவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அம்மாநில அரசின் இந்த திட்டம் வரவேற்கத்தக்கது ஆகும்.

தமிழ்நாட்டில் உழவர்கள் விளைவிக்கும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்க குவிண்டாலுக்கு ரூ.500 ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழகத்தை ஆட்சி செய்த அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

தமிழ்நாட்டில் மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் கொள்முதல் விலையுடன் சன்னரக நெல்லுக்கு ரூ.107, சாதாரண ரக நெல்லுக்கு ரூ.82 வீதம் தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3000 கொள்முதல் விலையாக வழங்க வேண்டும் என்று பா.ம.க.வும், உழவர் அமைப்புகளும் வலியுறுத்தி வரும் நிலையில், அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவாவது நியாயமான விலை கிடைக்க குவிண்டாலுக்கு ரூ.500 ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும். ஆனால், அந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்காததால் தான் நடப்பாண்டின் நெல் கொள்முதல் அளவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 10 லட்சம் டன் குறைந்துள்ளது.

மத்திய அரசு நிர்ணயித்த கொள்முதல் விலையுடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையையும் சேர்த்து சன்னரக நெல்லுக்கு ரூ.2310, சாதாரணரக நெல்லுக்கு ரூ.2265 வீதம் மட்டுமே கொள்முதல் விலையாக வழங்கப்படுகிறது. இந்த விலைக்கு உழவர்கள் நெல்லை விற்க கொள்முதல் நிலையங்களில் பல நாட்கள் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. அதேநேரத்தில் நடப்பாண்டில் தனியார் நெல் வணிகர்கள் குவிண்டாலுக்கு ரூ.2500 முதல் ரூ.2700 வரை கொள்முதல் விலை வழங்கியதுடன், உழவர்களின் களத்துக்கே சென்று நெல்லை கொள்முதல் செய்தனர். அதனால், உழவர்களுக்கு கைமீது அதிக தொகை கிடைத்ததால் பெரும்பான்மையான உழவர்கள் தனியாரிடம் நெல்லை விற்பனை செய்தனர். அரசின் நெல் கொள்முதல் அளவு குறைந்ததற்கு இதுதான் முக்கிய காரணம் ஆகும்.

தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கவுள்ள 2024-25ம் கொள்முதல் ஆண்டில் சன்னரக நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.2300 - ரூ.2350 என்ற அளவில் மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெல் சாகுபடிக்கான செலவுடன் ஒப்பிடும் போது இது போதுமானதல்ல. நடப்பாண்டிலாவது நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3000 கொள்முதல் விலை என்ற இலக்கை எட்ட வேண்டுமானால் ஒரு குவிண்டாலுக்கு குறைந்தது ரூ.700 ஊக்கத் தொகையாக தமிழக அரசு வழங்க வேண்டும். இதன் மூலம் தான் உழவர்களின் கண்ணீரைத் துடைக்க முடியும்.

தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.700 ஊக்கத்தொகை வழங்குவது சாத்தியமானது தான். தமிழ்நாட்டில் நடப்பாண்டில் சுமார் 30 லட்சம் டன் அளவுக்கு மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. 2024-25ம் ஆண்டில் 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக வைத்துக் கொண்டால் கூட, அதற்கு குவிண்டாலுக்கு ரூ.700 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டால் ஆண்டுக்கு ரூ.2800 கோடி மட்டும் தான் செலவாகும். ஆண்டுக்கு ரூ.3.50 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் தமிழக அரசுக்கு இது பெரிய தொகை அல்ல. எனவே, 2024-25ம் ஆண்டில் தமிழக அரசால் கொள்முதல் செய்யப்படும் சன்னரக நெல், சாதாரண ரக நெல் ஆகிய இரண்டுக்கும் குவிண்டாலுக்கு ரூ.700 வீதம் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்