செல்போன் கடை உரிமையாளர் உள்பட 7 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி

கம்பத்தில் செல்போன் கடை உரிமையாளர் உள்பட 7 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்ததாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-08-07 21:00 GMT

கம்பத்தில் செல்போன் கடை உரிமையாளர் உள்பட 7 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்ததாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செல்போன் கடை உரிமையாளர்

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கம்பம்மெட்டு காலனியை சேர்ந்தவர் ரியாஸ்தீன் (வயது 35). இவர் செல்போன் கடை வைத்துள்ளார். இவரது நண்பர்கள் முகமது சஜாத், ஹீமாயூன் கபீர். இவர்கள் சென்னையை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது காய்கறி, பழங்கள் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தின் கிளை அலுவலகத்தை கம்பத்தில் நிறுவி கவனித்து வந்தனர்.

இந்தநிலையில் முகமது சஜாத், ஹீமாயூன் கபீர் ஆகியோர் ரியாஸ்தீன் மற்றும் அவரது நண்பர்களை சந்தித்து, மோகன்ராஜின் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் லாபத்தில் 5 சதவீதம் பங்குத்தொகை தருவதாக கூறினர். இதனை நம்பிய ரியாஸ்தீன் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் சேர்ந்து ரூ.60 லட்சத்து 31 ஆயிரத்து 500-ஐ வங்கி பரிவர்த்தனை மூலமாகவும், ஆன்லைன் செயலி பரிவர்த்தனை மூலமாகவும் மோகன்ராஜின் நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

3 பேர் மீது வழக்கு

பணம் செலுத்திய சில மாதங்கள் ரியாஸ்தீன் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேருக்கு பங்குத்தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக பங்குத்தொகை வழங்கப்படவில்லை. மேலும் கம்பத்தில் செயல்பட்டு வந்த மோகன்ராஜின் கிளை அலுவலகம் திடீரென்று மூடப்பட்டது. இதுகுறித்து முகமது சஜாத், ஹீமாயூன் கபீர் ஆகியோரிடம் ரியாஸ்தீன் கேட்டபோது, அவர்கள் சரியான பதில் கூறவில்லை.

இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ரியாஸ்தீன் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர், இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில், ரூ.60 லட்சம் மோசடி செய்ததாக முகமது சஜாத், ஹீமாயூன் கபீர், மோகன்ராஜ் ஆகிய 3 பேர் மீது கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்