பொது இடங்களில் முககவசம் அணியாமல் வந்தால் ரூ.500 அபராதம்; தென்காசி கலெக்டர் ஆகாஷ் எச்சரிக்கை

தென்காசி மாவட்டத்தில் பொது இடங்களில் முககவசம் அணியாமல் வந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-07-05 12:36 GMT

தென்காசி மாவட்டத்தில் பொது இடங்களில் முககவசம் அணியாமல் வந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கொரோனா பரவல்

கொரோனா நோய் பெருந்தொற்று பாதிப்பு தற்போது கணிசமாக உயர தொடங்கியுள்ள நிலையில் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் ஆயுதமாக திகழ்ந்துவரும் தடுப்பூசி செலுத்துவது, பொது இடங்களில் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திக் கொள்வது, அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கைகழுவுதல், பொது இடங்களில் எச்சில் துப்பாமல் இருப்பது ஆகியவற்றை பொதுமக்கள் கடைப்பிடிக்க தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

ரூ.500 அபராதம்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு அரசு விதிகளின்படி ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும். அரசு, தனியார் மற்றும் பொதுத்துறை அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் முக கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய கல்வியியல் நிலையங்களில் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் முக கவசம் அணிந்து வருவதை பள்ளி கல்லூரி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அனைத்து பயணிகளும் முக கவசம் அணிந்து பயணம் செய்வதை நடத்துனர் கண்காணிக்க வேண்டும். இதனை அந்தந்த பணிமனை கிளை மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அனைத்து வித வியாபார மையங்களிலும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து மட்டுமே கடைக்கு வர அறிவுறுத்த வேண்டும். வழிபாட்டுத்தலங்களுக்கு வரும் பக்தர்கள் முக கவசம் அணிந்து வருவதை கோவில் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். திரையரங்குகளுக்கு செல்வோர் முக கவசம் அணிந்து வருவதை அந்தந்த திரையரங்க உரிமையாளர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் பொது நிகழ்வுகள், திருமண வைபவங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் நிகழ்வுகளில் கலந்து கொள்வோர் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

தடுப்பூசி

கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு சென்று வரும்போது மக்கள் கோவிட் அறிகுறி தென்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கட்டாயம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டும். பரிசோதனை முடியும் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடையவரும் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வாரமும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருவதால் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசின் நிலையான விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்