போடிப்பட்
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்கறிகள் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆனாலும் பந்தல் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டாத நிலை உள்ளது. பீர்க்கன், பாகல், புடலை உள்ளிட்ட தோட்டக்கலைத்துறைப் பயிர்களுக்கு பந்தல் அமைப்பது அவசியமாகிறது.ஆனால் பந்தல் அமைப்பதற்கு செலவு அதிகம் பிடிப்பதால் விவசாயிகள் பந்தல் சாகுபடி மேற்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.
இந்தநிலையில் கல்தூண்கள் அமைத்து நிரந்தர பந்தல் அமைப்பதற்கு ஒரு விவசாயிக்கு ரூ. 4 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் கல் தூண்கள் அமைத்து நிரந்தர பந்தல் அமைப்பதற்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 80 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. அதன்படி ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 5 ஏக்கர் வரை பந்தல் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைந்து நிரந்தர பந்தல் அமைத்து பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகள் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் இந்த பந்தலை பயன்படுத்தி சாகுபடி மேற்கொள்ள முடியும் என்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.