ரூ.36 கோடி திமிங்கல உமிழ்நீர் கட்டி பறிமுதல்

மார்த்தாண்டத்தில் ரூ.36 கோடி திமிங்கல உமிழ்நீர் கட்டி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சொகுசு காரில் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-29 18:45 GMT

குழித்துறை:

மார்த்தாண்டத்தில் ரூ.36 கோடி திமிங்கல உமிழ்நீர் கட்டி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சொகுசு காரில் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திமிங்கல உமிழ்நீர் கட்டி

கேரள மாநிலத்தில் இருந்து குமரிக்கு 'ஆம்பர் கிரீஸ்' எனப்படும் திமிங்கல உமிழ்நீர் கட்டி கடத்தப்படுவதாக மார்த்தாண்டம் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் உஷாராகி மார்த்தாண்டம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மார்த்தாண்டம் பஸ் நிலையம் அருகே குழித்துறை ரெயில் நிலையம் செல்லும் வளைவில் ஒரு சொகுசு காரில் சிலர் சந்தேகப்படும்படியாக இருந்தனர். இதனை கவனித்த போலீசார் அந்த காரை சுற்றி வளைத்து மடக்கினர். பின்னர் காரை சோதனையிட்டதில் 36 கிலோ திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

6 பேர் சிக்கினர்

மேலும் காரில் இருந்த 6 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், திமிங்கல உமிழ்நீர் கட்டியை கடத்தி வந்தது கேரள மாநிலத்தை சேர்ந்த கும்பல் என்பதும், திருவனந்தபுரம் மாவட்டம் வெம்பாயம் குதிரை குளம் ஒழுகுபாறை பகுதியை சேர்ந்த விவேகானந்தன் (வயது 49), கொல்லம் உமையநல்லூர் நிஜு (39), காரக்கோணம் நெடியவிளை ஜெயன் (41), காரக்கோணம் குன்னத்துகாடு திலீப் (26), பாலக்காடு ஒற்றைப்பாலம் படியன் நாட்டில் சொர்னூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (50), பாலக்காடு மாவட்டம் ஒற்றைப் பாலம் தனக்காடு குன்னத்து பகுதியை சேர்ந்த வீரான் (61) ஆகிய 6 பேர் என்பதும் தெரிய வந்தது.

இந்த திமிங்கல உமிழ்நீர் கட்டி நறுமண பொருட்கள், வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதற்கு வெளிநாடுகளில் கடும் கிராக்கி என கூறப்படுகிறது. திமிங்கல உமிழ்நீர் கட்டியை சட்ட விரோதமாக குமரிக்கு விற்க வந்த போது கேரள கும்பல் போலீசாரிடம் சிக்கியது. அதே சமயத்தில் திமிங்கல உமிழ்நீர் கட்டியை வாங்க தயாராக இருந்தவர்கள் யாரென்று அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

ரூ.36 கோடி மதிப்பு

திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டிக்கு மதிப்பு அதிகம் என்பதால் அதனை கடல் தங்கம் என கடத்தல் கும்பல் அழைக்கிறார்கள். சட்டவிரோதமாக திமிங்கல உமிழ்நீர் கட்டி கடத்தப்படும் சம்பவம் குமரியிலும் அதிகரித்து வருகிறது. அரபு நாடுகளில் 1 கிலோ திமிங்கல உமிழ்நீர் கட்டிக்கு ரூ.1 கோடி வரை விலை கொடுத்து வாங்கி கொள்ளப்படுகிறதாம்.

இதனால் பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கல உமிழ்நீர் கட்டியின் மதிப்பு ரூ.36 கோடி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் பிடிபட்ட 6 பேர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கல உமிழ்நீர் கட்டி, சொகுசு காரை போலீசார் குமரி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து திமிங்கல உமிழ்நீர் கட்டி எங்கிருந்து கிடைத்தது? குமரியில் யாரிடம் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தனர்? அவர்களின் கடத்தல் பின்னணி தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்