தஞ்சை ராஜகோரி சுடுகாட்டில் உடல் தகனம் செய்ய ரூ.3 ஆயிரம் கட்டணம்

தஞ்சை ராஜகோரி சுடுகாட்டில் உடல் தகனம் செய்ய ரூ.3 ஆயிரம் கட்டணம் வசூலிக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-09-30 21:30 GMT

மாமன்ற கூட்டம்

தஞ்சை மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாமன்ற கூட்டம் நடந்தது. இதற்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, முன்னாள் ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியவுடன் மேயர் சண்.ராமநாதன் பேசும்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட அய்யங்குளத்துக்கு மத்திய அரசு சார்பில் குடியரசுத் தலைவர் போபாலில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதற்காக நிதி வழங்கிய மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும், ஒத்துழைப்பு நல்கிய மாநகராட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சி பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

பின்னர் கவுன்சிலர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

கோபால் (அ.தி.மு.க) : தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை இணைப்பு இல்லாதவர்களுக்கும் பாதாள சாக்கடை பயன்பாட்டுக்கான கட்டணம் ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம் செலுத்துமாறு கடிதம் வருகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த கட்டணத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்.

கட்டணம் ரத்து

மேயர் சண்.ராமநாதன்: பாதாள சாக்கடை இணைப்பு இல்லாதவர்களுக்கு இது போன்று கடிதம் வந்தால், உடனடியாக மாநகராட்சி அலுவலகத்தை அணுகி, அதற்கான எழுத்துபூர்வமான கடிதத்தை வழங்கினால் அந்த கட்டணம் ரத்து செய்யப்படும்.

எதிர்க்கட்சி தலைவர் மணிகண்டன் (அ.தி.மு.க) : தஞ்சை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே நீர்நிலைகளை மேம்படுத்தி தண்ணீர் நிரப்ப வேண்டும். தஞ்சை ராஜகோரி சுடுகாட்டில் இலவசமாக உடலை தகனம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.3 ஆயிரம் கட்டணம் வசூலிக்க யார் அனுமதி வழங்கியது?. இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும்.

ரூ.3 ஆயிரம் வசூல்

மேயர்: ராஜகோரி சுடுகாட்டில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இலவசமாக உடல் தகனம் செய்யப்பட்டது. தற்போது பராமரிப்பு செலவு அதிகரித்துள்ளதால், அதற்கான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டியதுள்ளது. உடல் தகனம் செய்ய ரூ.3 ஆயிரம் வசூலிக்க அதற்காக அமைக்கப்பட்ட குழு அனுமதி வழங்கியுள்ளது. தஞ்சை மாநகரில் 40 குளங்கள் இருந்தது. தற்போது 15 குளங்கள் சீரமைக்க மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டில் உள்ள குளங்களில் நீர் நிரப்பப்படுகிறது.

ஜெய்சதீஷ் (பா.ஜ.க) : எங்களது பகுதியில் காய்ச்சல் அதிகம் பரவுகிறது. எனவே கொசுமருந்து அதிகளவில் அடித்து காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும்.

மேயர்: மாநகராட்சி பகுதிகள் முழுவதும் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதார குழு அமைக்கப்பட்டுள்ளது.மேற்கண்டவாறு கவுன்சிலர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.தஞ்சை ராஜகோரி சுடுகாட்டில் உடல் தகனம் செய்ய ரூ.3 ஆயிரம் கட்டணம் வசூலிக்கவும் மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாராட்டு விழாவில் கண்ணீர் சிந்திய மேயர்-ஆணையர்

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று கரூர் மாநகராட்சிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்ட ஆணையர் சரவணகுமாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பேசும்போது, கடனில்லா மாநகராட்சியாக மாற்றியவர் தற்போது கூட வணிக வளாகங்களை வாடகைக்கு ஏலம் விட்டதின் மூலம் கிடைத்த ரூ.27 கோடியே 92 லட்சத்தை வைப்புத் தொகையாக வைத்துவிட்டு செல்கிறார் என்றார்.

துணை மேயர் அஞ்சுகம் பூபதி பேசும்போது, அதிகாரிகள் எவ்வளவு படித்திருந்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் இணக்கத்துடன் செயல்பட வேண்டும். அவர் செல்லும் ஊர்களில் மக்கள் பிரதிநிதிகளுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்றார். இந்த விழாவில் மேயர் சண்.ராமநாதன் பேசும் போதும், ஆணையர் சரவணகுமார் ஏற்புரை வழங்கும் போது நா தழுதழுக்க பேசும் போது கண்ணீர் விட்டு அழுதனர். விழாவில் மாமன்ற உறுப்பினர்களும் பாராட்டி பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்