பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை; சபாநாயகர் அப்பாவு வழங்கி தொடங்கி வைத்தார்

நெல்லை மாவட்டத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.;

Update: 2023-09-15 19:45 GMT

நெல்லை மாவட்டத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் வகையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரத்தில் தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள வர்த்தக மையம் கூட்டரங்கில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான வங்கி பரிவர்த்தன அட்டைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

அளவில்லாத மகிழ்ச்சி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டமானது, மக்களின் மனதில் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியை தரக்கூடிய திட்டமாகும். தேர்வு முடிவுகளுக்கு காத்திருக்கும் மாணவ-மாணவிகள் போல இந்த உரிமைத்தொகை திட்டத்திற்காக பெண்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு உரிமைத்தொகை கிடைத்த குறுந்தகவல் வந்ததும் அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகளிர் இலவச பஸ் பயணம், ஏழை விவசாயிகளுக்கு இலவச பம்பு செட், புதுமைப்பெண் திட்டம் என பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக அமல்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பேசுகையில், இந்தியாவில் வங்கி பயனாளர்கள் குறைந்தபட்ச இருப்பு தொகையை கணக்கில் வைத்திருக்காத காரணத்தினால் ரூ.23 ஆயிரம் கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இது தவிர அதிகளவு ஏ.டி.எம் பயன்படுத்தியதற்காகவும், குறுந்தகவல் அனுப்பும் வசதிக்காகவும் என சுமார் 35 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வங்கி கணக்குகளில் இருந்து அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இனி ஏழை பெண்களின் வங்கி கணக்குகளில் இருந்து இதுபோன்ற அபராத தொகைகள் எடுக்கப்படாது என்ற நிலையை தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் ஏற்படுத்தி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

2 லட்சம் பெண்களுக்கு உரிமைத்தொகை

பின்னர் கலெக்டர் கார்த்திகேயன் கூறுகையில், ''நெல்லை மாவட்டத்தில் 840 ரேஷன் கடைகள் உள்ளன. மொத்தம் 5 லட்சத்து ஆயிரத்து 877 அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க 4 லட்சத்து 30 ஆயிரத்து 930 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டது. அதில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 345 பேர் நிரப்பி ஒப்படைத்தனர். இதில் சுமார் 2 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாதந்தோறும் நெல்லை மாவட்டத்திற்கு மட்டும் 25 கோடி ரூபாய் செலவாகிறது. மாற்றுத்திறனாளிகள், முதியோர், விதவைகள் உதவித்தொகை என மாதந்தோறும் 40 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர். இலவச பஸ் பயணம் மூலமாக மாவட்டத்தில் ஒரு லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். மகளிர் குழு மூலமாக ஒரு மாதத்தில் 60 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இவ்வாறாக நெல்லை மாவட்டத்தில் மகளிருக்கு மட்டும் ரூ.120 கோடியை தமிழக அரசு வழங்கி வருகிறது'' என்றார்.

நிகழ்ச்சியில் காஞ்சீபுரத்தில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சு ஒளிபரப்பப்பட்டது.

விழாவில் ஞானதிரவியம் எம்.பி., அப்துல்வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், உதவி கலெக்டர்கள் ஷேக் அயூப், முகமது சபீர் ஆலம், பயிற்சி உதவி கலெக்டர் கிஷன்குமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், பாளையங்கோட்டை யூனியன் தலைவர் தங்கபாண்டியன், மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், மாநில வர்த்தக அணி இணை செயலாளர் மாலைராஜா, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வில்சன் மணித்துரை, மாணவரணி துணை அமைப்பாளர் ஆறுமுகராஜா, மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், மகேஸ்வரி, கவுன்சிலர்கள் ஜெகநாதன், கருப்பசாமி கோட்டையப்பன், ரவீந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விழா மேடையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.

அடிப்படை வசதி

வள்ளியூர் பேரூராட்சி நம்பியான்விளை 14-வது வார்டு பகுதி மக்கள் கண்ணன் தலைமையில், சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். அதில், ''எங்கள் ஊருக்கு மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி, ரேஷன் கடை, கலையரங்கம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றித்தர வேண்டும்'' என தெரிவித்து இருந்தனர். மனுவை பெற்று கொண்ட சபாநாயகர் வரும் நிதியாண்டில் தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரேஷன் கடை, கலையரங்கம் போன்றவற்றை அமைத்து தருவதாக கூறினார்.

தொடர்ந்து நம்பியான்விளையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை மேற்கொண்ட சபாநாயகர் அப்பாவுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்