கோவை என்ஜினீயரிடம் ரூ.10½ லட்சம் மோசடி

கோவை என்ஜினீயரிடம் ரூ.10½ லட்சம் மோசடி

Update: 2023-07-30 19:00 GMT

கோவை

கோவையில் ஆன்லைன் பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி கோவை என்ஜினீயரிடம் ரூ.10½ லட்சம் மோசடி செய்த மர்ம பெண் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ஜினீயர்

கோவை சின்னியம்பாளையம் பி.எல்.எஸ். நகரை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 30). என்ஜினீயர். இவரது செல்போனிற்கு கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆன்லைனில் பகுதி நேர வேலைவாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த குறுஞ்செய்தியில் இருந்த லிங்கை அழுத்தி டெலிகிராம் குரூப்பில் இணைந்தார். பின்னர் அதில் சாமிநாதன் தனது விபரங்களை பதிவு செய்தார்.

இதையடுத்து அவரை, கார்த்திகா என்பவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கார்த்திகா, தான் அனுப்பும் தனியார் உணவு நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று அதில் உள்ள ஒவ்வொரு உணவு வகைகளுக்கும் ரிவியூ கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதனை நம்பிய சாமிநாதன், சம்பந்தப்பட்ட உணவு நிறுவனத்தின் இணையத்திற்கு சென்று உணவுகளுக்கு ரிவியூ பதிவு செய்தார். இதற்கு அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷனாக கிடைத்தது.

மோசடி

இதையடுத்து சாமிநாதனை தொடர்பு கொண்ட கார்த்திகா, பணம் செலுத்தி ஆன்லைன் பகுதி வேலையை செய்து முடித்தால் அதிக கமிஷன் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார். இதையடுத்து சாமிநாதன் முதற்கட்டமாக ரூ.10 ஆயிரம் செலுத்தினார். அதன்பின்னர் கார்த்திகா கொடுத்த பணிகளை அவர் செய்து முடித்தார். அதற்கு அவருக்கு கமிஷன் தொகையாக ரூ.13 ஆயிரம் கிடைத்தது.இதையடுத்து சாமிநாதன் பல்வேறு கட்டங்களாக கார்த்திகா கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.10 லட்சத்து 65 ஆயிரம் அனுப்பினார். ஆனால் அந்த தொகைக்கு கமிஷன் தொகை எதுவும் கிடைக்கவில்லை. மேலும் கார்த்திகாவை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாமிநாதன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்