பொக்லைன் எந்திர உரிமையாளரிடம் ரூ.10½ லட்சம் மோசடி செய்தவருக்கு வலைவீச்சு

பொக்லைன் எந்திர உரிமையாளரிடம் ரூ.10½ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-06-06 16:15 GMT

விழுப்புரம்,

பொக்லைன் எந்திர உரிமையாளர்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகா அனந்தமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 50), விவசாயி. இவர் சொந்தமாக 2 பொக்லைன் எந்திரங்களை வாங்கி தொழில் செய்து வந்தார். விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா எறையூர் கிராமத்தை சேர்ந்த தீர்த்தமலை என்பவர், சதாசிவத்தை தொடர்பு கொண்டு, தான் அரசு ஒப்பந்ததாரராக இருந்து வருவதாகவும், உங்களிடம் இருக்கும் 2 பொக்லைன் எந்திரங்களை மாத வாடகைக்கு தரும்படியும் கேட்டுள்ளார்.

அதற்கு ஒப்புக்கொண்ட சதாசிவம், மாதம் ரூ.90 ஆயிரம் வாடகை தர வேண்டும் என்று கூறி அதற்கான வாடகை ஒப்பந்த பத்திரத்தை ஏற்படுத்திக்கொண்டு அந்த 2 பொக்லைன் எந்திரங்களையும் கடந்த 28.7.2021 அன்று தீர்த்தமலையின் வீட்டு முன்பு விட்டார். அதன் பிறகு 2 பொக்லைன் எந்திரங்களையும் சேர்த்து முன்பணமாக ரூ.6 லட்சம் பேசி ரூ.5 லட்சத்தை மட்டும் சதாசிவத்திற்கு கொடுத்ததோடு மீதமுள்ள ரூ.1 லட்சத்தை பின்னர் தருவதாக தீர்த்தமலை கூறியுள்ளார்.

ரூ.10½ லட்சம் மோசடி

மேலும் முதல் மாத வாடகை ரூ.70 ஆயிரத்தை மட்டும் சதாசிவத்திற்கு தீர்த்தமலை கொடுத்துள்ளார். ஆனால் அதன் பின்னர் மாத வாடகை கொடுக்காமல் ரூ.9 லட்சத்து 60 ஆயிரமும் மற்றும் முன்பணம் ரூ.1 லட்சமும் திரும்ப தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுபற்றி சதாசிவம், தீர்த்தமலையிடம் சென்று தனக்கு தர வேண்டிய பணம் அல்லது தன்னுடைய பொக்லைன் எந்திரங்களை தரும்படி கேட்டதற்கு தர முடியாது என்று தீர்த்தமலை கூறியதோடு அவர், சதாசிவத்தை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து சதாசிவம், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தீர்த்தமலை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்