நாகாலாந்து மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி பேச்சு - கவர்னர் இல.கணேசன் கண்டனம்
ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு நாட்டின் கலாச்சாரத்தை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளதாக இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
கோஹிமா,
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பேசிய தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நாகாலாந்து மக்கள் குறித்து பேசிய கருத்துக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு நாட்டின் கலாச்சாரத்தை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், உணவு பழக்கத்தை வைத்து நாகா மக்களை கொச்சைப்படுத்தக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஒட்டுமொத்த நாகா மக்களையும் நாய்கறி சாப்பிடுபவர்கள் போல சித்தரிப்பதா? என்று கேள்வி எழுப்பியுள்ள இல.கணேசன், நாகா மக்களுக்கும், தமிழர்களுக்கும் இடையிலான இணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.