தமிழக வீரர்களுக்கு ரூ.9½ கோடி ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ.9½ கோடி ஊக்கத்தொகையை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2023-10-12 20:50 GMT

சென்னை,

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்த 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 107 பதக்கங்கள் குவித்து வரலாறு படைத்தது. இந்திய அணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த 48 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். அதில் 20 பேர், 9 தங்கம், 11 வெள்ளி, 8 வெண்கலம் என 28 பதக்கங்களை அள்ளினர்.

இதன்படி தடகளத்தில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற ராஜேஷ் ரமேஷ், 2 வெள்ளி வென்ற சுபா வெங்கடேசன், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் வென்ற வித்யா ராம்ராஜ், டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெண்கலம் வென்ற பிரவின் சித்ரவேல், துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற பிரதிவிராஜ் தொண்டைமான், ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி வென்ற சவுரவ் கோஷல், 2 தங்கம் வென்ற ஹரிந்தர் பால் சிங் சந்து, தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற அபய் சிங், தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற தீபிகா பல்லிகல், வெண்கலம் வென்ற ஜோஷ்னா சின்னப்பா, டென்னிசில் வெள்ளி வென்ற ராம்குமார், ரோலர் ஸ்கேட்டிங்கில் தலா ஒரு வெண்கலம் வென்ற ஆனந்த் குமார், ஆர்த்தி கஸ்தூரிராஜ், கார்த்திகா, செஸ் போட்டியில் தலா ஒரு வெண்கலம் வென்ற குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி, சவிதா ஸ்ரீ, கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் ஆகிய 20 விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு உரிய ஊக்கத் தொகையாக மொத்தம் ரூ.9.4 கோடிக்கான காசோலையை, சென்னையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கி பாராட்டினார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

முதலிடத்துக்கு முன்னேற வேண்டும்

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா மொத்தமாக வென்ற 107 பதக்கங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மட்டும் 28 பதக்கங்களைப் பெற்றுள்ளனர். இந்திய அளவில் தமிழகம் 5-வது இடத்தைப் பெற்றுள்ளது. விரைவில் தமிழ்நாடு, முதலிடத்துக்கு முன்னேற வேண்டும். அகில இந்திய அளவிலே, உலகளாவிலான போட்டிகளில் தொடர்ந்து உங்களது பங்களிப்பை செலுத்துமாறு வீரர்களை கேட்டுக் கொள்கிறேன். தொடர்ச்சியான பதக்கங்கள் பெறுவதும், தொடர் வெற்றிகளைப் பெறுவதும்தான் உங்களுக்கும் பெருமை, தமிழ்நாட்டுக்கும் பெருமை, ஏன் இந்தியாவிற்கே பெருமை.

நம்முடைய திராவிட மாடல் அரசானது, அனைத்துத் துறைகளிலும் அதிகக் கவனம் செலுத்துவதன் மூலமாக, அனைத்துத் துறைகளையும் ஒருசேர வளர்த்து வந்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சில துறைகள் ஸ்டார் துறைகளாக வளர்ந்து வருகின்றன. அதில் விளையாட்டுத் துறையும் ஒன்று. இந்தத் துறையின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு ஸ்டாராக இருப்பதால், இந்த துறையும் ஸ்டார் துறையாக வளர்ந்துவிட்டது.

ரூ.52.82 கோடி ஊக்கத்தொகை

விளையாட்டுத் துறையின் மூலமாக, விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இளைய சமுதாயமும் எழுச்சி பெற்று வருகிறது. நாள்தோறும் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான விளையாட்டுத் துறை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்த துறை உலகமே வியந்து பார்க்கும் பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளது. அதில் மிக முக்கியமானது 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி. இனி யாரும் இப்படி நடத்த முடியாது என்று சொல்லத்தக்க வகையில் மெச்சத்தக்க வகையில் மிகக் குறுகிய காலத்தில் வெகு சிறப்பாக நடத்தி முடித்துக் காட்டினோம். அதேபோல் இந்த இரண்டு ஆண்டுகளில், பன்னாட்டு மற்றும் தேசிய அளவில் பதக்கங்கள் வென்று இந்தியாவிற்கும் மற்றும் தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடித் தந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 1,864 விளையாட்டு வீரர்களுக்கு மொத்தம் ரூ.52.82 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பங்கேற்பு

விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ராஜகண்ணப்பன், எம்.பி.க்கள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணைத்தலைவர்கள் அசோக் சிகாமணி, ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்