அரசு உதவித்தொகை திட்டத்தில் ரூ.89 லட்சம் மோசடி: திருநங்கைகள் உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு

சேலத்தில் அரசு உதவித்தொகை திட்டத்தில் ரூ.89 லட்சம் மோசடி வழக்கில் கைதான திருநங்கைகள் உள்பட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Update: 2023-07-29 19:52 GMT

ரூ.89 லட்சம் மோசடி

சேலம் தெற்கு தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியாற்றி வருபவர் தமிழ்முல்லை. இந்த அலுவலகத்தில் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் மாதந்தோறும் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உதவித்தொகை குறித்த கணக்கு தணிக்கை செய்தபோது கடந்த 2020-ம் ஆண்டு ரூ.89 லட்சம் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தாசில்தார் தமிழ்முல்லை அளித்த புகாரின்பேரில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த பாலம்பட்டியை சேர்ந்த பவித்ரா (வயது 21), அரசு நிதி உதவி பெற்று வரும் சேலம் பஞ்சதாங்கி ஏரி பகுதியை சேர்ந்த பயனாளி திருநங்கை சாந்தி, குகையை சேர்ந்த திருநங்கை மாதம்மாள் ஆகியோரை கைது செய்தனர்.

சிறையில் அடைப்பு

இவர்களின் வங்கி கணக்கிற்கு மட்டும் பல லட்சம் ரூபாய் முறைகேடான முறையில் வரவு வைக்கப்பட்டுள்ளது. உதவித்தொகைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நபர்களின் விண்ணப்ப மனுவில் இவர்கள் 3 பேரின் வங்கி கணக்கு மட்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் கைதான சாந்தி தனக்கு வரும் பணத்தை உறவினர்களிடம் கொடுத்து வைத்துள்ளதும், பவித்ரா தனது தந்தை மூலம் நிலம் வாங்கி இருப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து விசாரணைக்கு பின் பவித்ரா உள்பட 3 பேரும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பெண்கள் தனிக்கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த மோசடி தொடர்பாக அவர்கள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்பின்னர் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்