ஈரோட்டில்மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி கொடுப்பதாக கூறி ரூ.8½ லட்சம் மோசடி- வாலிபர் கைது; 3 பேருக்கு வலைவீச்சு

ஈரோட்டில் மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி கொடுப்பதாக கூறி ரூ.8½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். பெண் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-08-02 22:02 GMT

ஈரோட்டில் மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி கொடுப்பதாக கூறி ரூ.8½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். பெண் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ரூ.8½ லட்சம்

ஈரோடு கருங்கல்பாளையம் கலைஞர்நகரை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 46). இவர் ஐஸ் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மகள் மருத்துவ படிப்பு படிப்பதற்காக நீட் தேர்வை எழுதினார். ஆனால் மதிப்பெண் குறைவாக பெற்றதால் அவருக்கு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்காக இடம் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் ஜாகீர் உசேன் செல்போனுக்கு ஒருவர் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று இருந்தாலும், மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்காக 'சீட்' வாங்கி கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால் அதற்கு பணம் செலவாகும் என்றும் அவர் கூறிஉள்ளார். ஏற்கனவே மகளுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காத சோகத்தில் இருந்த ஜாகீர் உசேனுக்கு சற்று நம்பிக்கை அளித்தது. இதனால் அவரது பேச்சை நம்பி அவர் கேட்கும் பணத்தை தவணை அடிப்படையில் கொடுத்தார். மொத்தம் ரூ.8½ லட்சம் கொடுத்து உள்ளார். ஆனால் அந்த நபர் பணத்தை பெற்றுக்கொண்டு மருத்துவ படிப்புக்கான இடத்தை வாங்கி கொடுக்கவில்லை.

போலீஸ் விசாரணை

ஜாகீர் உசேன் அந்த நபரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தான் ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்தார். இதுகுறித்து ஜாகீர் உசேன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அதன்பேரில் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மோசடியில் ஈடுபட்டவர்கள் கடலூர் மாவட்டம் மஞ்ச குப்பத்தை சேர்ந்த கணேசனின் மகன் சந்திரமோகன் (29) என்பதும், அவருடன் சேர்ந்து கோவையை சேர்ந்த பெண் உள்பட 3 பேரும் மோசடி செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

கைது

இதற்கிடையே சந்திரமோகன் கடலூரில் பதுங்கி இருப்பதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, சந்திரமோகனை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு மடிக்கணினி, 2 செல்போன்கள், 4 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பெண் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்