பட்டதாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி

குறைந்த வட்டியில் கடன் தருவதாக பட்டதாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி; சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Update: 2022-05-28 13:57 GMT

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அம்பலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரம் (வயது 30). பட்டதாரியான இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் எந்தவிதமான ஆவணங்களும் இன்றி குறைந்த வட்டிக்கு கடன் வழங்குவதாக கூறப்பட்டிருந்தது. இதனால் அந்த குறுஞ்செய்தி வந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு சிங்காரம் பேசினார். பின்னர் தனக்கு கடன் வழங்குமாறு கூறினார். இந்த நிலையில் அவருக்கு கடன் வழங்குவதாக தெரிவித்த அவர்கள் அதற்கு சேவை கட்டணம் மற்றும் கமிஷன் தொகையை செலுத்த வேண்டும் என்று கூறி பலமுறை பணம் கேட்டுள்ளனர். அதை நம்பி சிங்காரம் கடந்த ஓராண்டில் அவர்கள் தெரிவித்த வங்கிக்கணக்கில் ரூ.7 லட்சத்து 95 ஆயிரம் தொகையை அனுப்பியுள்ளார். ஆனால் கூறியபடி கடன் வழங்காமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிங்காரம் இதுபற்றி தர்மபுரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்