சென்னை விமான நிலையத்தில் ரூ.78 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.78 லட்சம் தங்கம் பறிமுதல்.

Update: 2022-09-30 21:25 GMT

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியை விமான நிலைய ஒப்பந்த பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். அப்போது ஒப்பந்த ஊழியர் ராம்குமார் என்பவர் வைத்திருந்த 'கிளினிங் மாப்' கம்பு மீது மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் சச்சின் குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ஒப்பந்த ஊழியரிடம் இருந்த மாப்பை வாங்கி கழற்றி பார்த்தார். அதில் மாப்பின் கைப்பிடி குழாய்க்குள் இருந்து 10 பாக்கெட்டுகள் வெளியே வந்து விழுந்தன. அதனை பிரித்து பார்த்தபோது அதில் ரூ.78 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 811 கிராம் தங்க பசை இருந்தது. இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா், தங்கப்பசை, ஒப்பந்த ஊழியருடன் மாப்பையும் கைப்பற்றி உயா் அதிகாரிகளிடம் ஒப்படைத்தாா்.

மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்தி விட்டு சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். சுங்க இலாகா அதிகாரிகள், ஒப்பந்த ஊழியரிடம் தங்கம் எப்படி வந்தது? வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த ஆசாமி, அதனை விமான நிலைய ஒப்பந்த ஊழியரிடம் கொடுத்து மாப்புக்குள் மறைத்து வைத்து வெளியே கொண்டு செல்ல முயன்றிருக்கலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக ஒப்பந்த ஊழியரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்