கோவை பேராசிரியரிடம் ரூ.7¼ லட்சம் மோசடி

கோவை பேராசிரியரிடம் ரூ.7¼ லட்சம் மோசடி

Update: 2023-05-20 18:45 GMT

கோவை

ஆன்லைன் முதலீடு மூலம் அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தை கூறி கோவை தனியார் கல்லூரி பேராசிரியரிடம் ரூ.7¼ லட்சம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒலம்பஸ்

கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40). தனியார் கல்லூரி பேராசிரியர். இந்த நிலையில் ஒரு பெண் பெயரில் டெலிகிராம் மூலம் இவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து விஜயகுமாரை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பிரபலமாக உள்ள நட்சத்திர ஓட்டல்கள் குறித்து அதற்கான இணையதளத்தில் சிறந்த முறையில் கருத்துக்கள் (ரிவ்யூ) பதிவு வேண்டும். இதற்கு ஓரளவு வருமானம் கிடைக்கும் என்று தெரிவித்தார். இதனை நம்பிய விஜயகுமார் சில ஓட்டல்களுக்கு ரிவ்யூ கொடுத்தார். இதையடுத்து அவருக்கு ரூ.858 கமிஷனாக கிடைத்தது.

முதலீடு

இதனை தொடர்ந்து அவரிடம், ஆன்லைனில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்று அந்த மர்ம நபர் தெரிவித்தார். இதனை உண்மை என்று நம்பிய விஜயகுமார் முதலில் ரூ.10 ஆயிரத்து 500 முதலீடு செய்தார். இதற்கு லாபமாக அவருக்கு ரூ.17 ஆயிரத்து 948 கிடைத்தது. இதன்பின்னர் அவர் ரூ.38 ஆயிரத்து 686 முதலீடு செய்தார். இதற்கு லாபமாக ரூ.51 ஆயிரத்து 105 கிடைத்தது.

அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை காரணமாக விஜயகுமார் பல்வேறு கட்டங்களாக ரூ.7 லட்சத்து 24 ஆயிரம் ஆன்லைன் முதலீடு செய்தார். அதன் பிறகு அவருக்கு கமிஷன் தொகை வரவில்லை. மேலும் அவருக்கு ஏற்கனவே வந்த கமிஷன் தொகை மற்றும் முதலீடு செய்த ரூ.7¼ லட்சம் பணத்தை திரும்ப பெற்று தனது கணக்கிற்கு வரவு வைக்க முயன்றார். ஆனால் அவருக்கு முதலீடு தொகை மற்றும் லாப தொகை எதுவும் கிடைக்கவில்லை.

இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஜயகுமார் இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ரூ.7¼ லட்சம் மோசடி குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்