கோ-ஆப்டெக்ஸ் ஊழியரிடம் ரூ.7¼ லட்சம் மோசடி

கோ-ஆப்டெக்ஸ் ஊழியரிடம் ரூ.7¼ லட்சம் மோசடி

Update: 2023-06-09 18:45 GMT

குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறி கோ -ஆப்டெக்ஸ் ஊழியரிடம் ரூ.7¼ லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்

திருவாரூர் மாவட்டம் எடைமேலையூர் பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 60). இவர் கோ-ஆப்டெக்ஸ்சில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் இவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார்.

அப்போது அந்த நபர் தங்களுக்கு தேவையான தொகையை குறைந்த வட்டியில் கடனாக பெற்று கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். உடனே காமராஜ் ரூ.10 லட்சம் கடன் கேட்டுள்ளார். தொடர்ந்து மர்மநபர் காமராஜிடம் வங்கி கணக்கு விவரங்கள், ஆதார், பான் காா்டு உள்ளிட்ட ஆதாரங்களை பெற்று கொண்டு, இதற்காக சர்வீஸ் சார்ஜ் மற்றும் இதர செலவுகளுக்காக பணம் அனுப்புமாறு தெரிவித்தார்.

ரூ.7.21 லட்சம் மோசடி

இதை உண்மை என நம்பிய அவர் பல்வேறு தவணைகளாக ரூ.7 லட்சத்து 21 ஆயிரத்து 228-யை செலுத்தியுள்ளார். ஆனால் அந்த மர்ம நபர் காமராஜிக்கு எந்த கடனும் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த காமராஜ் அந்த மர்மநபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு எந்த கடனும் வேண்டாம் தான் செலுத்திய பணத்தை திருப்பி கொடுத்து விடுமாறு கேட்டுள்ளார்.

ஆனால் அந்த நபர் பணத்தை கொடுக்கவில்லை. மேலும் அந்த எண்ணை தொடர்பு கொள்ளமுடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் திருவாரூர் சைபர்கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்