வீட்டு உபயோக பொருட்கள் தருவதாக ஆன்லைன் மூலம் ரூ.6 லட்சம் மோசடி

குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்கள் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி செய்த ஆசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-06-08 21:00 GMT


குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்கள் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி செய்த ஆசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீட்டு உபயோக பொருட்கள்

கோவை சின்னவேடம்பட்டி முருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 40). இவர் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைனில் பல்வேறு பொருட்களை வாங்கி வியாபார நிறுவனம் நடத்த திட்டமிட்டார். இதற்காக பொருட்களை ஒட்டுமொத்தமாக வாங்க இணையதளத்தில் பல்வேறு விவரங்களை தேடினார்.

அப்போது மிகக் குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்களை வழங்கும் ஒரு நிறுவனத்தின் இணையதள முகவரிக்கு சென்று அதில் குறிப்பிடப்பட்ட செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்த நபர் வெளிநாட்டிலிருந்து குறைந்த விலையில் வீட்டு உபயோகப் பொருட்களை குறிப்பாக டி.வி, குளிர்சாதன பெட்டி, சலவை எந்திரம், மடிக்கணினி போன்றவற்றை அனுப்புவதாக தெரிவித்தார்.

ரூ.6 லட்சம் மோசடி

இதற்காக வரி மற்றும் பார்சல் பட்டணம் போன்றவற்றை செலுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து கார்த்திகேயன் ரூ.6 லட்சத்து 7 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் செலுத்தினார். ஆனால் அந்த நபர் பொருட்களை அனுப்பவில்லை. மேலும் அவர் பணம் கேட்டு தொடர்ந்து செல்போனில் தொந்தரவு செய்து வந்தார்.

இதையடுத்து அந்த மோசடி நபர் மேலும் ரூ.59 ஆயிரம் அனுப்பினால் பொருட்களை விமானத்தின் மூலமாக துபாயில் இருந்து அனுப்பி வைப்பேன். இல்லாவிட்டால் அனுப்ப முடியாது என்றும் கூறி உள்ளார்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கார்த்திகேயன் இதுதொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடி ஆசாமியின் செல்போன் எண்ணை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்