மோட்டார் சைக்கிளில் கடத்திய ரூ.6 கோடி திமிங்கல உமிழ்நீர் கட்டி பறிமுதல்

மோட்டார் சைக்கிளில் கடத்திய ரூ.6 கோடி திமிங்கல உமிழ்நீர் கட்டி பறிமுதல்

Update: 2023-05-12 18:45 GMT

கொரடாச்சேரி அருகே மோட்டார் சைக்கிளில் ரூ.6 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் கட்டியை கடத்திய 3 பேரை வன அலுவலர்கள் கைது செய்தனர்.

திமிங்கல உமிழ்நீர் கட்டி

அரியவகை உயிரினமான திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டிகளில்(ஆம்பர் கிரீஸ்) இருந்து உயர்ரக வாசனை திரவியங்கள் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதனை மூலப்பொருளாக பயன்படுத்தி மருத்துவத்துறையில் பல்வேறு மருந்துகளும் தயாரிக்கப்படுகிறது. இதனால் திமிங்கலத்தின் உமிழ்நீருக்கு சர்வதேச சந்தையில் அதிக மதிப்பு உள்ளது.

இதனால் தமிழகத்தில் திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டிகள் கடத்தும் கும்பல் அதிகரித்து வருகிறது. ஆங்காங்கே சில மாவட்டங்களில் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். திருவாரூரில் திமிங்கலம் உமிழ்நீர் கட்டி கடத்தப்படுவதாக திருச்சி தலைமை வனபாதுகாவலர் சதீஷ்சுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட வனத்துறை அலுவலர் அறிவொளி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

ரூ.6 கோடி மதிப்பு

அப்போது திருவாரூர் கொரடாச்சேரி சாலை அம்மையப்பன் பகுதியில் 3 மோட்டாா் சைக்கிளில் 4 பேர் வந்தனர். அவர்கள் வனத்துறை அலுவலா்களை கண்டதும் தங்களது வாகனங்களை அங்கேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களில் 3 பேரை வனத்துறை அலுவலர்கள் விரட்டிச்சென்று பிடித்தனர். இதில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

பிடிபட்ட 3 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திருச்சியை சேர்ந்த சுரேஷ்(வயது 42), நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த வேல்முருகன்(40), திருவாரூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(59) ஆகியோர் என்பதும், இவர்கள் மோட்டார் சைக்கிளில் 5½ கிலோ எடையுள்ள ரூ.6 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் கட்டியை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

3 பேர் கைது

இதையடுத்து அவர்களிடம் இருந்த திமிங்கலம் உமிழ்நீரை கட்டியை பறிமுதல் செய்ததுடன் 3 பேரையும் கைது செய்து திருவாரூர் மாவட்ட வன அலுவலர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் அறிவொளி கூறுகையில், இந்த கடத்தலின்போது தப்பி ஓடிய நபர் தான் முக்கிய குற்றவாளி. அவர் பிடிபட்டால் தான் திமிங்கல உமிழ்நீர் கட்டி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? யாருக்கு விற்பனை செய்ய கடத்தி வரப்பட்டது? என்பது குறித்து தெரிய வரும். இதனால் தப்பி ஓடியவரை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்