வெளிநாடுகளுக்கு போலி கொரோனா மருந்து அனுப்பி ரூ.6 கோடி மோசடி: கணவன்-மனைவி கைது
வெளிநாடுகளுக்கு போலி கொரோனா மருந்து அனுப்பி ரூ.6 கோடி மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.;
சென்னை கீழ்கட்டளையில் முருகப்பா ஹோல்சேல்ஸ் சப்ளையர்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை ஹரிகரசுப்பிரமணியம் (வயது 37) மற்றும் அவரது மனைவி காஞ்சனா (25) ஆகியோர் நடத்தி வந்தனர். இவர்கள் மீது அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தது.
அதில், வெளிநாடுகளுக்கு போலியான கொரோனா மருந்தை சப்ளை செய்து, ரூ.6.30 கோடி மோசடி செய்து விட்டதாக, அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ஹரிகரசுப்பிரமணியம், காஞ்சனா ஆகியோரை கைது செய்தனர். காஞ்சனா கைக்குழந்தையுடன் கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது.