ரூ.51 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.51 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-10-08 21:00 GMT

செம்பட்டு:

அதிகாரிகள் சோதனை

திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தி தற்போது திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வரும் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்து ஒரு விமானம் திருச்சி வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்துக்குரிய முறையில் இருந்த 2 பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.

தங்கம் பறிமுதல்

இதில் அவர்கள் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த பயணிகளில் ஒருவரான திருப்பூரைச் சேர்ந்த உஷா சிவலிங்கம்(வயது 38) தனது உள்ளாடையில் மறைத்து ரூ.26 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான 505 கிராம் தங்கத்தையும், ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது இக்பால் அப்துல்அஜீஸ்(36) தனது உடலில் மறைத்து ரூ.24 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான 475 கிராம் தங்கத்தையும் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து சுமார் ரூ.51 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பிலான சுமார் ஒரு கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து தொடர்ந்து அந்த பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்