கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் செயல்பட்டால் ரூ.500 அபராதம் - சுகாதாரத்துறை எச்சரிக்கை
விதிமீறலின் தன்மையைப் பொறுத்து ஒவ்வொரு முறையும் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கொசு உற்பத்திக்கு காரணமாகும் வகையில் செயல்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை காரணமாக டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவதாக குறிப்பிட்டுள்ளார். அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், தங்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
அவ்வாறு தகவல் தெரிவிக்காவிட்டால், உரிய விதிமுறைகளின்படி அபராதம் விதிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். அதே போல் கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படும் பொதுமக்கள், கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விதிமீறலின் தன்மையைப் பொறுத்து ஒவ்வொரு முறையும் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.