அதிக வட்டி தருவதாக 4,500 பேரிடம் ரூ.500 கோடி மோசடி: தனியார் நிறுவனம் தொடர்புடைய 21 இடங்களில் போலீசார் சோதனை

சென்னையில் அதிக வட்டி தருவதாக ரூ.500 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தனியார் நிறுவனம் தொடர்புடைய 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

Update: 2022-11-24 04:32 GMT

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற தொழில் நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனம், பல்வேறு தொழில்களை செய்து வருவதாகவும், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் 15 சதவீத வட்டி வழங்கப்படும் என்றும், மாதந்தோறும் வட்டிப்பணம் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் என்றும் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டது.

அதை நம்பி ஏராளமானவர்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தார்கள்.

ஆனால் அறிவித்தபடி அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வட்டி தொகையை கொடுக்கவில்லை. அசல் தொகைக்கும் 'பட்டை நாமம்' போட்டு விட்டது. ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளர்களில் 1,500 பேர், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார்களை குவித்தார்கள். தற்போது 4,500 பேரிடம் பணத்தை சுருட்டியது அம்பலமாகி உள்ளது.

மோசடி தொகையும் ரூ.360 கோடியில் இருந்து ரூ.500 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. இது தொடர்பாக நிதிநிறுவனத்தின் இயக்குனர்கள் அலெக்சாண்டர், சவுந்திரராஜன் உள்ளிட்ட 21 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரான நேரு (வயது 49) கடந்த 16-ந்தேதி சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களின் வீடுகள் உள்ளிட்ட 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் வழக்கிற்கு தேவையான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்