ரூ.50 கோடி கன்டெய்னர் மோசடி வழக்கில்: 2 முக்கிய குற்றவாளிகளுக்கு குண்டர் சட்டத்தில் 1 ஆண்டு சிறை - கமிஷனர் அதிரடி உத்தரவு

ரூ.50 கோடி கன்டெய்னர் மோசடி வழக்கில் 2 முக்கிய குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் 1 ஆண்டு சிறையில் அடைக்க கமிஷனர் அதிரடி உத்தரவிட்டார்.

Update: 2022-07-01 04:45 GMT

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய பயன்படும் கன்டெய்னர்களை குறைந்த வாடகைக்கு எடுத்து தருவதாக கூறி ஒரு மோசடி கும்பல் பிரபல நிறுவனங்களிடம் ரூ.50 கோடி வரை சுருட்டி உள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ரேவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். முதலில் இந்த வழக்கில் பொன்ராஜ், டேவிட், கோகுல்ராஜ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள், 188 பவுன் தங்க நகைகள் மற்றும், ரூ.58 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த டைட்டல் சாமுவேல் (வயது 45), சுரேஷ்குமார் (24) மற்றும் வெற்றிமாறன் (34) ஆகியோர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளான பொன்ராஜ், டேவிட் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்க சிபாரிசு செய்யப்பட்டது. அதை ஏற்று அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்