பஞ்சாயத்து தலைவி வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை

நாங்குநேரி அருகே, பஞ்சாயத்து தலைவி வீட்டில் ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-08-10 22:01 GMT

நாங்குநேரி:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால் குறிச்சி பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் சாந்தகுமாரி (வயது 55). இவருடைய கணவர் செல்லையா (60). ஓய்வு பெற்ற தாசில்தார் ஆவார். இவர்களுக்கு நாங்குநேரியை அடுத்துள்ள தென்னிமலையில் தோட்டம் மற்றும் பண்ணை வீடு உள்ளது. இருவரும் அடிக்கடி பண்ணை வீட்டிற்கு சென்று விவசாய வேலைகளை கவனிப்பது வழக்கம். அதேபோல் பண்ணை வீட்டுக்கு சென்றனர்.

பின்னர் நேற்று முன்தினம் தோட்டத்திலிருந்து வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பீரோவை பார்த்தபோது அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. ரூ.5 லட்சம் வரை கொள்ளை போய் இருக்கலாம் எனவும், முழுமையான பணம் பற்றிய விவரம் விசாரணைக்கு பின்னர் தான் தெரியவரும் எனவும் போலீசார் கூறினர். மேலும் ஒரு டி.வி.யும் திருட்டு போனது. சாந்தகுமாரி வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதுகுறித்து சாந்தகுமாரி அளித்த புகாரின் பேரில் நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி விசாரணை நடத்தினார். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பஞ்சாயத்து தலைவி வீட்டில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட துணிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்