அடுத்தடுத்து 2 வீடுகளில் ரூ.5 லட்சம் நகை-பணம் கொள்ளை

தியாகதுருகத்தில் அடுத்தடுத்து 2 வீடுகளில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2023-06-20 17:04 GMT

தியாகதுருகம், 

நகை-பணம் கொள்ளை

தியாகதுருகம் புக்குளம் சாலையில் பாலாஜி நகரை சேர்ந்தவர் அஜீஸ்சுல்லா (வயது 59). தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 17-ந் தேதி தனது மனைவி அஸ்ரபுன்னிஸாவுடன் புதுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் நேற்று மதியம் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகை, ¼ கிலோ வெள்ளி கொலுசு, ரூ.45 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. அதை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

மற்றொரு வீடு

இதேபோல் அதே பகுதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னப்பையன் மகன் சங்கர் (36). தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு, மனைவி சவிதா மற்றும் 2 குழந்தைகளுடன் தியாகதுருகம் நல்லான்கொல்லை தெருவில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து நேற்று காலை சங்கர் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்ட நிலையில், அதில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகையை காணவில்லை.

போலீசார் விசாரணை

அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவங்கள் குறிந்த தகவல் அறிந்ததும் தியாகதுருகம் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீடுகளை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அதில், 2 வீடுகளிலும் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனிடையே கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மர்மநபா்களின் கைரேகை பதிவுகளை சேகரித்து சென்றனர். இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்தடுத்து 2 வீடுகளில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகை-பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்