தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.5 லட்சம் வைர நகை திருட்டு

தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.5 லட்சம் வைர நகை திருட்டு

Update: 2022-09-12 15:34 GMT

கோவை

ஓட்டலுக்கு சாப்பிட சென்றபோது தொழில் அதிபர் மனைவியின் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைரநகை திருட்டுபோனது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஓட்டலுக்கு சென்றனர்

கோவை நேருநகர் மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சங்கர் ஆனந்த் (42), தொழில் அதிபர். இவருடைய மனைவி ஹேமலதா (39). நேற்று முன்தினம் விடுமுறை நாள் என்பதால் ஹேமலதா தனது 2 மகன்களுடன் கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.

பின்னர் 3 பேரும் அங்கு சாப்பிட்டு முடித்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஓட்டலில் கூட்டம் அதிகமாக இருந்தது. பின்னர் சாப்பிட்டு முடித்த ஹேமலதா தனது மகன்களுடன் ஓட்டலை விட்டு வெளியே வந்தார். அப்போது அவருடைய கையில் அணிந்து இருந்த (கை செயின்) வைர நகையை காணவில்லை.

வைர கைசெயின்

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தான் ஓட்டலுக்குள் சாப்பிட்ட இடத்துக்கு ஓடிச்சென்று பார்த்தார். அத்துடன் ஓட்டல் ஊழியர்களிடம் கூறி தேடி பார்த்தார். ஆனால் அங்கு அந்த கைசெயின் கிடைக்கவில்லை. அதன் மதிப்பு ரூ.5 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அந்த ஓட்டலுக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் அந்த ஓட்டல் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசார் விசாரணை

இது குறித்து போலீசார் கூறும்போது, அந்த ஓட்டலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் ஹேமலதா அணிந்து இருந்த வைர கைசெயினை திருடி சென்றிருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்