ரூ.5 கோடி மதிப்பில் மிதக்கும் உணவக கப்பல் அமைக்கும் பணி: அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு

முட்டுக்காடு படகு குழாம் வளாகத்தில் ரூ.5 கோடியில் அமைக்கப்பட உள்ள மிதக்கும் உணவக கப்பல் கட்டுமான பணியை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-06-29 18:41 GMT

சென்னை,

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு குழாம் செயல்பட்டு வருகின்றது.

இங்கு பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் மிதவை படகுகள், எந்திர படகுகள், வேகமான எந்திர படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.சுற்றுலா பயணிகளின் வருகையை அதிரிப்பதற்காக படகு குழாம் வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரமாண்டமான ஈரடுக்கு மிதக்கும் உணவக கப்பல் பயணம் தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் முதல் முறையாக இந்த மிதவை உணவக கப்பல் அமைக்கப்படுகிறது.

அமைச்சர் ஆய்வு

இந்த மிதக்கும் உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது. முதல் தளம் திறந்தவெளி தளமாகவும், சுற்றுலா பயணிகள் மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கப்பல் அமைக்கும் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் 4 இடங்களில்...

இதன்பின்பு அமைச்சர் நிருபர்களிடம் கூறும்போது, 'தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் 9 இடங்களில் படகு குழாம்கள் செயல்பட்டு வருகின்றன. முட்டுக்காடு படகு குழாமில் மிதவை உணவக கப்பல் பணிகள் முடிவடைந்தவுடன் அதிக சுற்றுலா பயணிகள் வரும் வாய்ப்பு உள்ளது. கோவை வாலங்குளம், ஊட்டி உள்பட 4 இடங்களில் மிதவை உணவக கப்பல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்