புதுச்சேரியில் ரூ.4.09 கோடி பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

புதுவையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் கத்தை கத்தையாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் உள்பட ரூ.4 கோடியே 9 லட்சம் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-04-18 12:52 GMT

புதுவை, 

புதுவை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ்(வைத்திலிங்கம்), பா.ஜனதா (நமச்சிவாயம்), அ.தி.மு.க.(தமிழ்வேந்தன்) உள்பட 26 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், இன்று மதியம் 100 அடி சாலை அருகேயுள்ள ஜான்சி நகரில் ஒரு பைனான்சியர் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் பறக்கும் படைக்கு கிடைத்தது. இதையடுத்து,சம்பந்தப்பட்ட வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அது என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும், புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் பெரிய பாளையத்தம்மன் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வரும் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வீடு என்பது தெரியவந்தது. அவரது வீட்டில் 6 நாய்கள் இருந்தது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை பார்த்த உடன் நாய்கள் குரைத்தன.

அப்போது நாய்களை கட்டி வைத்திருந்த அறையை பார்த்தனர். அங்கு நாய்களுக்கு பின்னர் 2 மூட்டைகள் கிடந்தன. எனவே அவர்கள் சந்தேகத்தில் அடிப்படையில் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

உடனே அதிகாரிகள் வீட்டின் முன்பக்க கதவை மூடி விட்டு உள்ளே சோதனை நடத்தினர். அப்போது அதில் ரூ.1 கோடி(ரூ.2 ஆயிரம் நோட்டுகள்), ரூ. 2 கோடியே 68 லட்சத்து 78 ஆயிரத்து 500 (ரூ.500 நோட்டுகள்) இருப்பது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து முருகேசனுக்கு சொந்தமான நெல்லித்தோப்பில் உள்ள அவரது நிதி நிறுவன அலுவலகத்திற்கு பறக்கும் படை அதிகாரிகள் சென்று திடீர் சோதனை நடத்தினர்.அப்போது அங்கு இருந்து ரூ.40 லட்சத்து 46 ஆயிரத்து 500 பறிமுதல் செய்தனர். இவை இரண்டும் சேர்த்து மொத்தம் ரூ.4 கோடியே 9 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்து சென்று அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவர்கள் விசாரணை நடத்திய போது பணத்திற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. எனவே அதிகாரிகள் அந்த பணத்தை புதுவை அரசின் கரூவூலத்துறையில் ஒப்படைத்தனர். முருகேசனிடம் அவர்கள் உரிய ஆவணத்தை காட்டி பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தனர். மேலும் அவரிடம், வாக்காளர்களுக்கு பணம் ஏதாவது வினியோகம் செய்தாரா? என்றும் விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்