மொரப்பூர், செப்.23-
தென்பெண்ணை ஆற்றின் உபரிநீரை 60 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பெறும், நிலத்தடி நீர்மட்டம் உயரும், குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். ரூ.400 கோடியில் உருவான இந்த திட்டம் மீண்டும் புத்துயிர் பெறுமா? என்று 100 கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தென்பெண்ைண ஆறு
தென்பெண்ணை ஆறு, கா்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்கள் வழியாக ஓடி வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இந்த தென்பெண்ணை ஆறு, தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே கே.ஈச்சம்பாடி வழியாக ஓடுகிறது. இந்த பகுதியில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது.
அணையின் வலதுபுற கால்வாய் கே.ஈச்சம்பாடி, பெரமாண்டபட்டி, நவலை, சாமாண்டஅள்ளி, எலவடை, மருதிபட்டி, எம். வெலாம்பட்டி உள்ளிட்ட கிராம பஞ்சாயத்து பகுதிகள் வழியாக சென்று எம்.வெலாம்பட்டி பகுதியில் மீண்டும் தென்பெண்ணை ஆற்றுடன் இணைகிறது. கே.ஈச்சம்பாடி அணையில் இருந்து வலதுபுற கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும்போது 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறுகிறது.
60 ஏரிகளில்...
தென்பெண்ணை ஆற்றில் எத்தனையோ தடுப்பணைகள் இருந்தாலும் மழைக்காலங்களில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதற்கிடையே தர்மபுரி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. எனவே மழைக்காலங்களில் தென்பெண்ணை ஆற்றில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை தர்மபுரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மாற்ற ஒரு திட்டம் கொண்டு வர வேண்டும்.
இந்த திட்டத்தின்படி மழைக்காலங்களில் ஆற்றில் ஓடும் உபரிநீரை, கம்பைநல்லூர், வெதரம்தரம்பட்டி, பெரமாண்டப்பட்டி, நவலை சின்னாகவுண்டம்பட்டி, பொம்பட்டி, போளையம்பள்ளி, ஆர்.கோபிநாதம்பட்டி, ராமாபுரம், ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி, சென்னம்பட்டி, தாசரஅள்ளி, மொரப்பூர் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 60 ஏரிகளில் நீரேற்றும் குழாய்கள் மூலம் கொண்டு சென்று நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர்.
ரூ.400 கோடியில் திட்டம்
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தென்பெண்ணை ஆற்று உபரி நீரேற்றும் திட்டம் ரூ.400 கோடியில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு அந்த திட்டம் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லாமல் அறிவிப்போடு மட்டும் நிற்கிறது.
இந்த நிலையில் இந்த நீரேற்றும் திட்டத்தை தமிழக அரசு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று மொரப்பூர், கம்பைநல்லூர் பகுதிகளை சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகள், அரசியல் கட்சிகள் நடத்தி வருகின்றன.
இந்த திட்டம் தொடர்பாக கே.ஈச்சம்பாடி பகுதி மக்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அதன் விவரம் வருமாறு:-
மானாவாரி பயிர்கள்
சின்னாகவுண்டம்பட்டி விவசாயி ஜெயபால்:- கம்பைநல்லூர், மொரப்பூர் பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு வரை கரும்பு, மஞ்சள், நெல் ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்தன. போதுமான மழை இல்லாததால் தற்போது மானாவாரி பயிர்களான மரவள்ளி, பருத்தி மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் உபரி நீர் கடலில் கலக்கிறது. அதில் சிறு பகுதியை கே.ஈச்சம்பாடி பகுதியில் இருந்து நீரேற்றம் செய்து இந்த பகுதியில் 60 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். அப்படி இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் 100 கிராமங்கள் பயன்பெறும். மேலும் வலதுபுற கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து கிடக்கிறது. இதனால் தண்ணீர் செல்லும் பாதையில் தடை ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாயை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.
நிலத்தடி நீர்மட்டம் உயரும்
ஆண்டிபட்டியைச் சேர்ந்த விவசாயி கவிதா இளஞ்செழியன்:- கே.ஈச்சம்பாடி அணை பகுதியில் இருந்து உபரிநீரை 60 ஏரிகளில் நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். மேலும் இந்த பகுதியும் வறட்சியில் இருந்து மீண்டும் பசுமையான பகுதியாக மாறும்.
இந்த பகுதிகளில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் இங்கேயே கிடைக்கும்.. இந்த திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்படுவதால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பிற ஏரிகள், கிணறுகள், குட்டைகளிலும் நீர்மட்டம் உயரும். இந்தப் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு காண உதவியாக இருக்கும்.
எதிர்பார்ப்பு
தமிழகத்தில் கடந்த நாட்களில் தி.மு.க. ஆட்சியில் எத்தனையோ நீர்நிலை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பெற்று வருகின்றனர். அதேபோன்று தர்மபுரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆறு உபரி நீரை 60 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தையும் தமிழக அரச நிறைவேற்றினால் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும்.
அதுமட்டும் அல்லாமல் அந்த பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரமும் மேம்பட வழி வகுக்கும். எனவே இந்த திட்டத்துக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.