பழங்குடியினருக்கு ரூ.394 கோடியில் அடிப்படை வசதிகள் - அமைச்சர் கா.ராமசந்திரன் தகவல்

வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினரின் அடிப்படை வசதிக்காக ரூ.394 கோடியில் பணிகளை மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-29 02:18 GMT

சென்னை:

சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள வனத்துறை கூட்ட அரங்கில் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தலைமையில் வனத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடந்தது. பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

தமிழகத்தின் வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் அடிப்படை வசதிக்காக ரூ.394.69 கோடியில் இணைப்புச் சாலைகள், தெரு விளக்குகள், குடிநீர் திட்டப் பணிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இணைப்புச் சாலைப் பணிகள் ரூ. 294.21 கோடி, தெரு விளக்குகள் ரூ 3.79 கோடி, சோலார் மின் விளக்குகள் ரூ 16.99 கோடி, குடிநீர் திட்டப் பணிகள் ரூ 79.69 கோடி மதிப்பிலும் பணிகளை மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் திட்டங்களுக்காக ரூ 93.99 கோடி நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் ஆணையின்படி பழங்குடியின மக்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிட பல்வேறு பணிகள் வனத்துறை மேற்கொண்டு வருகிறது.

நீதிமன்ற வழிகாட்டுதழின்படி வனப்பகுதியில் உள்ள அந்நிய களைத் தாவரங்களை அகற்றும் பணி மூலம் வேலைவாய்ப்பு, குடியிருப்பு வசதி, கல்வி, விவசாயம், தொழில் வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 700 எக்டேர் பரப்பளவில் பணிகளை மேற்கொள்ள ரூ 5 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் காணொலிகாட்சி வாயிலாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ மற்றும் வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்கள் சையத் முஜம்மில் அப்பாஸ், சுப்ரத் மஹபத்ரா, விஜேந்தர்சிங் மாலிக் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்