அடுத்தடுத்து 2 வீடுகளில் ரூ.3 லட்சம் நகை-பணம் கொள்ளை

கள்ளக்குறிச்சி அருகே பட்டப்பகலில் துணிகரம் அடுத்தடுத்து 2 வீடுகளில் ரூ.3 லட்சம் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Update: 2022-12-30 18:45 GMT

கண்டாச்சிமங்கலம்

கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாடூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியாபிள்ளை(வயது 57). இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு அவரது மனைவி சீராள் என்பவருடன் வேலைக்கு சென்றார். அப்போது வீட்டின் ஜன்னல் அருகே இருந்த சாவியை எடுத்த மர்மநபர்கள் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 4¾ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். அதேபோல் தெற்கு தெருவில் உள்ள சின்ராசு மகன் ஏழுமலை(30) என்பவரின் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இதை தொடர்ந்து அதே பகுதியில் கண் அறுவை சிகிச்சை செய்திருந்த தங்கவேல் மனைவி செல்லம்மாள்(60) என்பவரின் வீட்டிக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரிடம் உங்கள் மகன்தான் எங்களை இங்கே அனுப்பி வைத்துள்ளதாக கூறிக்கொண்டு வீட்டின் அறையில் இருந்த பீரோவை திறக்க முயன்றனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்லம்மாள் திருடன் திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இது குறித்த தகவல் அறிந்து தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், ஸ்டாலின், தடயவியல் நிபுணர் ராஜவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் அடுத்தடுத்து 2 வீடுகளில் 7¾ பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்