முன்னாள் ராணுவ வீரரின் மகளிடம் ரூ.3 லட்சம் மோசடி
முன்னாள் ராணுவ வீரரின் மகளிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி காந்திமார்க்கெட் கள்ளத்தெருவை சேர்ந்தவர் சுப்பையா. முன்னாள் ராணுவ வீரரான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மகள் மாலா (வயது 30). இவரிடம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், சென்னையில் மெட்ரோ ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பல்வேறு தவணைகளில் ரூ.3 லட்சத்தை பெற்றார். இதற்கு திருச்சியை சேர்ந்த வக்கீல் ஒருவரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. அதன்பிறகு அவர்கள் கூறியபடி ரெயில்வேயில் வேலை வாங்கித் தரவில்லை. இதனால் மாலா அவரைத் தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது அவர் விரைவில் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு அனுப்பப்படும் என கூறி காலதாமதம் செய்து வந்தார். ஆனாலும் வேலை வாங்கித் தராததால் மாலா தன்னிடம் ரூ.3 லட்சத்தை பெற்று கொண்டு மோசடி செய்து விட்டதாக திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனரை சந்தித்து கடந்த ஜூன் மாதம் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்த பாலக்கரை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் பாலக்கரை போலீசார் மோசடியில் ஈடுபட்ட நபர்களை அழைத்து விசாரணை நடத்தினார்கள். ஆனால் அதன்பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த மாலா, தனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி துணை கமிஷனர் சுரேஷ்குமாரை சந்தித்து மனு அளித்தார்.