ரூ.27 கோடியே 40 லட்சம் வரி நிலுவை: புதுக்கோட்டையில் 15 கடைகளுக்கு 'சீல்'
ரூ.27 கோடியே 40 லட்சம் வரி நிலுவை உள்ளதால் புதுக்கோட்டையில் 15 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ‘சீல்’ வைத்தனர்.
வரி நிலுவை
புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான பகுதிகளில் இயங்கும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் செலுத்த வேண்டிய வரிபாக்கி மற்றும் குத்தகை பாக்கி, வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சொத்து வரி, குடிநீர் வரி பாக்கியை பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் சம்பந்தப்பட்ட கடை, வணிக நிறுவனங்கள் வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர்கள் செலுத்தாததால் ரூ.27 கோடியே 40 லட்சம் வரி மற்றும் வாடகை பாக்கி நிலுவை உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி மற்றும் வாடகை பாக்கி செலுத்தாத கடை மற்றும் வீடுகளின் உரிமையாளர்களிடம் வரி வசூல் செய்யும் பணிகளில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வரி மற்றும் வாடகை தர மறுக்கும் கடைகளுக்கு 'சீல்' வைக்கும் பணிகளில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
15 கடைகளுக்கு 'சீல்'
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம், வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு முறையாக வாடகை செலுத்தாததால் நகராட்சி வருவாய் அலுவலர் விஜயா ஸ்ரீ தலைமையில் வருவாய் ஆய்வாளர் பாஷித் மற்றும் நகராட்சி அலுவலர்கள் நேற்று நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதில் நகராட்சிக்கு சொந்தமான 15 கடைகள் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டன. மேலும் வரி மற்றும் வாடகை பாக்கியை செலுத்தினால் மட்டுமே இனி கடை நடத்த முடியும் என்றும் அதேபோல் குத்தகைதாரர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிபாக்கியையும், வாடகை பாக்கியையும், குத்தகை தொகையையும் உடனடியாக செலுத்த வேண்டும் எனவும், அவ்வாறு இல்லையெனில் அந்தந்த நிறுவனம் மற்றும் கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும் எனவும், அதேபோல் சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தாத வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவு நீர் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.