தேங்காய் பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்க ரூ.248 கோடி மதிப்பில் திட்டம் - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
தேங்காய் பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் 4 துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரியில் உள்ள தேங்காய் பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் தமிழக மீன்வளத்துறை, சென்னை ஐ.ஐ.டி. உள்பட 4 துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டதாக கூறினார்.
இந்த ஆய்வின் அடிப்படையில் தேங்காய் பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்க ரூ.248 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.