வியாபாரியிடம் ரூ.22 லட்சம் தங்க கட்டி மோசடி

கோவையில் நகை செய்து தருவதாக கூறி வியாபாரியிடம் ரூ.22 லட்சம் தங்க கட்டியை மோசடி செய்துவிட்டு தலைமறைவான தம்பதி உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-11-23 18:45 GMT

கோவை

கோவையில் நகை செய்து தருவதாக கூறி வியாபாரியிடம் ரூ.22 லட்சம் தங்க கட்டியை மோசடி செய்துவிட்டு தலைமறைவான தம்பதி உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நகை வியாபாரி

கோவை வெரைட்டிஹால் ரோடு சாமி அய்யர் புது வீதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). இவர் நகைப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். அத்துடன் அவர் தான் செய்து வரும் நகையை வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருவதும் வழக்கம்.

இவருடைய பட்டறையில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த அனிமேஷ் ஹசரே (32), இவருடைய மனைவி சோம ஹசரே (27) மற்றும் உறவினரான சுரஜித் ஹசரே (34), ஸ்டெயாஜித் அதாக் (36) ஆகியோர் கடந்த 3 ஆண்டாக வேலை செய்து வந்தனர். அத்துடன் அவர்கள் சங்கர் வீட்டின் மேல் பகுதியில் தங்கி இருந்தனர்.

தங்க கட்டியுடன் மாயம்

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் சங்கர், தன்னிடம் இருந்த ரூ.22 லட்சம் மதிப்புள்ள ½ கிலோ தங்க கட்டியை அனிமேஷ் ஹசரே உள்பட 4 பேரிடம் கொடுத்து அதில் இருந்து நகை செய்யும்படி கூறினார். இதையடுத்து அவர்கள் அந்த தங்க கட்டியில் இருந்து நகை செய்தனர்.

இதற்கிடையே வியாபாரம் தொடர்பாக சங்கர் வெளியூர் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினார். ஆனால் அவருடைய வீட்டின் மேல் பகுதியில் தங்கி இருந்த அனிமேஷ் ஹசாரே உள்பட 4 பேரை காணவில்லை. உடனே அவர் நகைப்பட்டறையை திறந்து பார்த்தபோது, அவர்களிடம் கொடுத்த ரூ.22 லட்சம் தங்க கட்டியும் மாயமாகி இருந்தது.

போலீஸ் வலைவீச்சு

உடனே அவர், அனிமேஷ் ஹசரே உள்பட 4 பேரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போதுதான் அவருக்கு தம்பதி உள்பட 4 பேரும் நகை செய்து தருவதாக கூறி தங்க கட்டியை மோசடி செய்தது தெரியவந்தது.

இது குறித்து சங்கர் வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், தலைமறைவான தம்பதி உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். அத்துடன் அவர்களை பிடிக்க தனிப்படை மேற்கு வங்காளத்துக்கும் விரைந்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்