ஆன்லைனில் ரூ.2¼ லட்சம் மோசடி
சிவகாசியை சேர்ந்தவரின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைனில் ரூ.2¼ லட்சம் மோசடி செய்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்,
சிவகாசியை சேர்ந்தவரின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைனில் ரூ.2¼ லட்சம் மோசடி செய்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆன்லைன் மோசடி
சிவகாசியை சேர்ந்தவர் சங்கர நாராயணன். இவருக்கு செல்போன் மூலம் ஒரு தகவல் வந்தது. அதில் தங்கள் வங்கிக்கணக்கை, பான் அட்டையுடன் இணைக்க வேண்டும். இல்லையென்றால் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் செல்போனில் அனுப்பப்பட்டுள்ள லிங்கை அழுத்துமாறு கூறினர்.
இதையடுத்து சங்கரநாராயணன் உடனடியாக அந்த லிங்கை அழுத்தினார். லிங்க் அழுத்தியவுடன் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் ஆன்லைன் மூலமாக எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் விருதுநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் அறிவுறுத்தலின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டார்.
கோர்ட்டில் ஆஜர்
விசாரணையில் ஜார்கண்ட் மாநிலம் முராபிடி பகுதியை சேர்ந்த பிரமோத் குமார், அவரது சகோதரர் பினோத் குமார் ஆகிய இருவரின் வங்கிக்கணக்கிற்கு சங்கரநாராயணன் வங்கிக்கணக்கிலிருந்து பணம் மோசடியாக பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சகோதரர்கள் 2 பேரும் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது, இதையடுத்து போலீஸ்சூப்பிரண்டு மனோகர் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரியின் தலைமையிலான தனிப்படையினர் டெல்லி சென்று திகார் சிறையில் இருந்து பிரமோத் குமார், பினோத் குமார் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விருதுநகர் முதல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெறுகிறது.