மென்பொருள் நிறுவன ஊழியர்களிடம் ரூ.20 லட்சம் நூதன மோசடி

மென்பொருள் நிறுவன ஊழியர்களிடம் ரூ.20 லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-08-20 20:21 GMT

மென்பொருள் நிறுவன ஊழியர்

திருச்சி காந்திமார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 31). இவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த ஜூன் 10-ந் தேதி இவரது செல்போனின் வாட்ஸ்-அப்புக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் அர்ச்சனா என்ற பெண் அறிமுகமானார். அவர் தான் ஒரு நிறுவனத்தில் மனிதவள மேலாளர் என்றும், உங்களுக்கு ஆன்லைனில் வேலை காத்திருக்கிறது என்றும் தெரிவித்து ஒரு லிங்க் அனுப்பியுள்ளார். அந்த லிங்க்கை திறந்து பார்த்தபோது, அதில் பல்வேறு தொழில்துறையினர் தங்களுக்கு தேவையான போட்டோக்களை கூகுளில் தேடி அனுப்பினால் ஒரு போட்டோவுக்கு ரூ.50 வழங்குவதாகவும், இந்த வேலையில் பணம் முதலீடு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து கார்த்திகேயன் ரூ.1,000 முதலீடு செய்ததோடு, 6 போட்டோக்களையும் அனுப்பினார். இதையடுத்து அவரது வங்கி கணக்கிற்கு ரூ.1,300 வந்தது. பின்னர் அவர் ரூ.3,000 முதலீடு செய்தார். இதேபோல் பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.10 லட்சத்து 30 ஆயிரம் முதலீடு செய்தார். அதன்பின்னர் அவரது வங்கி கணக்கிற்கு எந்த பணமும் வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார்த்திகேயன், மாநகர சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிந்துநதி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

பணம் மோசடி

இதேபோல் திருச்சி சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 32). இவர் பி.சி.ஏ. படித்துவிட்டு ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் மர்மநபர் ஒருவர், இவரது இ-மெயில் மூலமாக இவரது செல்போனை பயன்படுத்தி அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சத்து 23 ஆயிரம் எடுத்தார். பின்னர் ஒருநாள் கழித்து மீண்டும் அவரது மற்றொரு வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 200-ஐ எடுத்துள்ளார்.

அடுத்த சில மாதங்களில் அந்த மர்ம நபர், சீனிவாசனின் சுயவிவரங்களை அவர் கணக்கு வைத்துள்ள ஒரு வங்கியில் சமர்ப்பித்து மேலும் ரூ.5 லட்சத்து 52 ஆயிரம் கடன் பெற்றார். இதன் மூலம் சீனிவாசன் கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை சுமார் ரூ.9¾ லட்சத்தை இழந்தார். இது குறித்து அவர் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்