மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.2 லட்சம் நகை-பணம் திருட்டு

சின்னசேலத்தில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-06-08 17:28 GMT

சின்னசேலம்,

சின்னசேலம் அடுத்த பூசப்பாடி திருச்சிக்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 66) விவசாயி. இவர் நேற்று காலை சின்னசேலம் மெயின் ரோட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தான் அடகு வைத்திருந்த 1¼ பவுன் நகையை மீட்டார். பின்னர் அந்த நகை மற்றும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தையும் தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்றார். பின்னர் அங்கு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு டீ குடிக்க கடைக்குள் சென்றார். பின்னர் திரும்பி வந்துபார்த்தபோது, மோட்டார் சைக்கிள் பெட்டி உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்த நகை மற்றும் பணத்தை காணவில்லை.

வலைவீச்சு

அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது.இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சோமசுந்தரம் டீ குடிக்க கடைக்குள் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் நகையை திருடிச்சென்றது தெரிந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்