வேலை வாங்கி தருவதாக பட்டதாரி வாலிபரிடம் ரூ.2½ கோடி மோசடி: கணவன், மனைவி கைது

வேலை வாங்கி தருவதாக மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியிடம் ரூ.2½ கோடி மோசடி செய்த கணவன், மனைவியை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-16 18:46 GMT

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் மாா்த் தாண்டம் பகுதியை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி ஒருவர் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ஆன்லைன் மூலம் புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துள்ளேன். உண்ணாமலைக்கடை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றினேன். அப்போது எனது இ-மெயில் முகவரிக்கு விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு தொடர்பான அழைப்பு வந்தது. அதில் ஒரு செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து அந்த இ-மெயிலில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது எதிர்முனையில் ஆண் குரலில் ஒருவர் பேசினார். அவர் என்னிடம், இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் உங்களது படிப்பிற்கு ஏற்ப நாங்கள் நடத்தும் தேர்வின் அடிப்படையில் பணி கிடைக்கும். இதற்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் சென்னையில் நடைபெறும். அதில் நீங்கள் பங்கேற்க வேண்டும் என்றார்.

விமான நிலையத்தில் வேலை

அவருடைய பேச்சை நம்பிய நான் சென்னைக்கு சென்றேன். அவர்கள் சொன்ன முகவரியில் ஒரு தனியார் ஓட்டல் இருந்தது. அங்கு பணியிடங்களுக்கான நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு நடந்தன. இதில் நானும் சந்தோசமாக பங்கேற்றேன். பின்னர் எந்தெந்த பணிகளுக்கு ஆட்கள் தேவை என்ற விவரங்களை இ-மெயில் முகவரியில் அனுப்பி வைப்பதாக தேர்வை நடத்தியவர்கள் கூறினர். மேலும் விமானி, விமான நிலைய மேற்பார்வையாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அப்போது நான் எனது சகோதரருக்கும் விமான நிலையத்தில் வேலை வாங்கி தரவேண்டும் என்றேன். அதற்கு அவர்கள் உறுதியாக உங்களுக்கு வேலை வாங்கி தருவதாகவும், முதலில் 2 பேருக்கும் சேர்த்து தலா ரூ.75 லட்சம் என மொத்தம் ரூ.1½ கோடி செலுத்த வேண்டும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நான் எனது வங்கி கணக்கு மூலமாகவும், நேரடியாகவும் முதலில் ரூ.1½ கோடி கொடுத்தேன். ஆனால் அதன்பிறகும் அவர்கள் கூடுதல் பணம் கேட்டனர்.

ரூ.2½ கோடி மோசடி

வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் அவர்கள் கூறியபடி சென்னையில் உள்ள முகவரிக்கு சென்று மீண்டும் பணத்தை கொடுத்தேன். அப்படி பல தவணைகளாக கடந்த 2022-ம் ஆண்டு வரை மொத்தம் ரூ.2 கோடியே 49 லட்சத்து 23 ஆயிரத்து 205-ஐ கொடுத்துள்ளேன். ஆனால் பணம் பெற்றவர்கள் சொன்னபடி வேலை வாங்கிதரவில்லை. ஆண்டுகள் தான் கடந்ததே தவிர வேலை கிடைக்கவில்லை.

பின்னர் தான் அவர்கள் தன்னை ஏமாற்றியதை அறிந்தேன். இதுதொடர்பாக கேட்டபோது அந்த கும்பல் என்னை மிரட்டி வருகிறது. எனவே என்னிடம் பணமோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

கணவன்-மனைவி கைது

இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சைபர் கிரைம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் வசந்தி, சப்-இன்ஸ்பெக்டர் அஜ்மல் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 45), அவரது மனைவி அம்பிகா (36) ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த கணவன், மனைவி இருவரையும் நேற்றுமுன்தினம் உடுமலைபேட்டையில் வைத்து குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்