ஸ்மார்ட் மீன் வளர்ப்பு திட்டத்துக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு அதிகாாி தகவல்
ஸ்மார்ட் மீன் வளர்ப்பு திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் புல்தீப் குமார் லால் தெரிவித்துள்ளார்.;
பரங்கிப்பேட்டை,
சென்னையில் உள்ள மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் புல்தீப் குமார் லால் கடலூர் மாவட்டம் முடசல் ஓடை, பிச்சாவரம் மற்றும் எம்.ஜி.ஆர். திட்டு ஆகிய இடங்களில் உள்ள இறால் பண்ணைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஸ்மாா்ட் பண்ணை இறால் வளர்ப்பு
மேம்படுத்தப்பட்ட இறால்களின் உயிரியல் பண்புகளை கொண்டு ஆதாயம் பெற, ஸ்மார்ட் பண்ணை இறால் வளர்ப்பு முறைகள் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும். இது நீர் மறுசுழற்சி, கழிவுகளை அகற்றுதல், இயற்கையான தீவன உற்பத்தி, சென்சார் அடிப்படையிலான நீர் கண்காணிப்பு, செயற்கை நுண்ணறிவு, தானியங்கு உணவு ஆகியவற்றை கொண்ட தொட்டி அல்லது சிறிய வட்டக்குளம் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.
இந்த முன்னேற்றங்கள் மேம்பட்ட செயல்திறன், தொழிலாளர் தேவைகளை குறைத்தல், மேம்பட்ட உயிர் பாதுகாப்பு மற்றும் தரவு சார்ந்த முடிவெடுக்கும் ஸ்மார்ட் விவசாய நடைமுறையை மேம்படுத்தும்.
ரூ.2 கோடி ஒதுக்கீடு
இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் மீன் வளர்ப்பு அமைப்பு இறால் வளர்ப்பின் எதிர்காலத்தையும் அதன் ஒட்டுமொத்த நிலைத்தன்மையையும் வடிவமைக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.
இத்தகைய ஒரு ஸ்மார்ட் வளர்ப்பு கலன்கள் மற்றும் முறைகளை உருவாக்க சென்னையில் உள்ள உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு, மத்திய அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டம் அடுத்த சில மாதங்களில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.