ரூ.1.92 கோடியில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
நெல்லை, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பயன்படுத்தும் வகையில் ரூ.1.92 கோடி மதிப்பிலான நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
சென்னை,
உணவு பொருட்களில் கலப்படத்தை தவிர்ப்பதற்கும், உணவின் தரத்தை தொடர்ந்து கண்காணிப்பதற்கும் நெல்லை, கோவை, சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பயன்படுத்தும் வகையில் ரூ.1.92 கோடி செலவில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் தமிழக அரசால் வாங்கப்பட்டுள்ளது.இதனை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்தபடி தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உணவு மாதிரிகள் ஆய்வு
நிகழ்ச்சி முடிவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஏற்கனவே சென்னை கிண்டி, சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 6 இடங்களில் உணவு பகுப்பாய்வகங்கள் செயல்படுகிறது.
2021-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2022-ம் ஆண்டு டிசம்பர் வரை 34 ஆயிரத்து 980 உணவு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு 2 ஆயிரத்து 266 உணவு மாதிரிகள் பாதுகாப்பற்றதாகவும், 7 ஆயிரத்து 405 உணவு மாதிரிகள் தரமற்றதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 6 ஆயிரத்து 542 வழக்குகள் தொடரப்பட்டு உரிமையியல் நீதிமன்றத்தின் மூலம் ரூ.6.17 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆயிரத்து 264 வழக்குகள் தொடரப்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் ரூ.2.18 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு-பயிற்சி
தற்போது கோவை, சேலம், தஞ்சாவூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் பயன்படுத்தும் வகையில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் 30 வகையான உணவு பொருட்களில் கலப்படங்களை கண்டறிய முடியும். இந்த வாகனங்கள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் உணவு வணிகர்களுக்கு தரமான உணவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி பயிற்சி அளிக்கப்படும். உணவு கலப்படம் குறித்து புகைப்படத்துடன் புகார் தெரிவிக்க 94440-42322 என்ற வாட்ஸ்-அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.