டீத்தூள் ஏஜெண்டிடம் ரூ.1.84 லட்சம் ஆன்லைன் மூலம் மோசடி

டீத்தூள் ஏஜெண்டிடம் ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-04-18 19:40 GMT

டீத்தூள் ஏஜெண்டிடம் ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குறைந்த வட்டிக்கு கடன்

திருச்சி மாவட்டம் துறையூர் பி.மேட்டூரை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 51). இவர் தனியார் டீத்தூள் கம்பெனியில் ஏஜெண்டாக உள்ளார். கடந்த 1½ மாதத்துக்கு முன்பு இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஒரு சதவீத வட்டிக்கு தொழிலை விரிவுப்படுத்த லட்சக்கணக்கில் கடன் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. உடனே ஆரோக்கியராஜ் குறுஞ்செய்தி அனுப்பிய நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

எதிர்முனையில் பேசிய நபர் ரூ.3 லட்சம் கடன் பெற வேண்டும் என்றால் செயல்முறை கட்டணமாக ரூ.7,060-ஐ செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளார். உடனே அந்த நபர் கேட்டு கொண்டபடி அவரது வங்கிகணக்கிற்கு மேற்கண்ட தொகையை அனுப்பினார். பின்னர் ஆதார்கார்டு, பான்கார்டு விவரங்களையும் அனுப்பி வைத்தார். சில நாட்கள் கழித்து ஜி.எஸ்.டி. கட்டணம் என மேலும் தொகையை அந்த மர்ம நபர் பெற்றுள்ளார்.

ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் மோசடி

அதன்பின்னர் அந்த நபர், கடன் தருவதற்கு முன்பு உங்கள் வீட்டை பார்வையிட்டு அலுவலர்கள் புகைப்படம் எடுத்து செல்வார்கள். அதற்கு ரூ.28 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும், இந்த தொகை அனைத்தும் மீண்டும் உங்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று கூறி உள்ளார். இதனை நம்பி ஆரோக்கியராஜ் சிறிது, சிறிதாக மொத்தம் ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 500 வரை செலுத்தியுள்ளார்.

ஆனால் கடைசிவரை அவருக்கு கடன் தொகை கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆரோக்கியராஜ் இது குறித்து மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்