திருவேற்காடு கோவிலில் ரூ.18 கோடியில் கும்பாபிஷேக பணிகள் - சேகர்பாபு ஆய்வு
திருவேற்காடு கோவிலில் ரூ.18 கோடியில் கும்பாபிஷேக பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு பாலாலயத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம், "ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். 2006-ம் ஆண்டு இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ரூ.18 கோடி செலவில் திருப்பணிகள் செய்யப்பட உள்ளது. சுமார் 2 ஆண்டுகள் பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் விழா நடத்தப்படும்" என்றார்.
முன்னதாக மூலவர், உற்சவர் மற்றும் பிரகாரத்தில் உள்ள அனைத்து சன்னதி தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றது. புனரமைப்பு பணிகள் தொடங்கப்படுவதையொட்டி சிறப்பு யாகங்களும், ஹோமங்களும் நடைபெற்றது. இதில் கோவில் இணை ஆணையர் சி.லட்சுமணன், துணை ஆணையர் ஜெயப்பிரியா, திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி, துணைத்தலைவர் ஆனந்தி ரமேஷ் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.