டேங்கர் லாரியில் எண்ணெய் திருடி விற்று ரூ.18 கோடி மோசடி

டேங்கர் லாரியில் ரூ.18 கோடிக்கு எண்ணெய் திருடி விற்ற வழக்கில், தூத்துக்குடியை சேர்ந்த லாரி டிரைவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-10 14:52 GMT

ரூ.18 கோடிக்கு எண்ணெய் திருட்டு

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தாழையூத்தில், தனியாருக்கு சொந்தமான பிரபல சமையல் எண்ணெய் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த 2020, 2021-ம் ஆண்டு கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன.

அப்போது ரூ.18 கோடி அளவுக்கு எண்ணெய் இருப்பு உள்ளதாக பொய் கணக்கு எழுதி மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் முதுநிலை துணை தலைவர் ஷியாம்சுந்தர், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வினோதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மேலும் 2 பேர் கைது

விசாரணையில், வெளிநாட்டில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து, பழனியில் அதை சுத்திகரிப்பு செய்து பின்னர் விற்பனை செய்வது வழக்கம். இதற்காக வெளிநாட்டில் இருந்து வரும் எண்ணெய் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் பழனிக்கு கொண்டு வரப்படுகிறது.

அவ்வாறு டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் எண்ணெயை நடுவழியில் திருடி விற்பனை செய்துள்ளனர். அந்த வகையில் 1,600 டன் எண்ணெயை திருடி விற்றுள்ளனர். இதில் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள், டேங்கர் லாரி டிரைவர்கள் இணைந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து எண்ணெய் நிறுவனத்தின் 2 அதிகாரிகள், டிரைவர்கள் உள்பட மொத்தம் 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த டேங்கர் லாரி டிரைவர்களான மாரிசெல்வம் (வயது 30), கனகராஜ் (32) ஆகியோருக்கும் எண்ணெய் திருட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து அந்த 2 பேரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்