புதுக்கோட்டை வியாபாரியிடம் ரூ.16 லட்சம் மோசடி

புதுக்கோட்டை வியாபாரியிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த ஆசாமி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-01-20 18:30 GMT

வியாபாரி

புதுக்கோட்டை பூங்கா நகரை சேர்ந்தவர் குருசபரி (வயது 24). இவர் மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் ஸ்பிரிட் எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28-ந் தேதி ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர் தான் மும்பையிலிருந்து பேசுவதாகவும், தனக்கு மும்பையில் வி.கே.ஜி.கே. எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் எண்ணெய் நிறுவனம் இருப்பதாகவும், மிக குறைந்த விலைக்கு மருத்துவமனைகளில் பயன்படுத்தும் ஸ்பிரிட் எண்ணெய் கிடைக்கும் என கூறியுள்ளார். மேலும், வீடியோ காலில் ஸ்பிரிட் எண்ணெயை காட்டியுள்ளார்.

ரூ.16 லட்சம் மோசடி

இதையடுத்து குருசபரி, மருத்துவமனைக்கு பயன்படுத்தும் ஸ்பிரிட் எண்ணெயை 10 லிட்டர் வாங்கியுள்ளார். தொடர்ந்து மொத்தமாக கொள்முதல் செய்ய பல தவணைகளாக ஆன்லைன் மூலம் ரூ.16 லட்சத்து 19 ஆயிரத்து 999 அனுப்பியுள்ளார். ஆனால் ஸ்பிரிட் எண்ணெயும் அனுப்பவில்லை, பணத்தையும் தரவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில், பலமுறை கேட்டும் எந்த பயனும் இல்லாததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குருசபரி இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி ஆசாமி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்