அரசு பள்ளிகளுக்கு ரூ.1.44 கோடி மானியம் முதன்மை கல்வி அலுவலர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மானியமாக ரூ.1 கோடியே 44 லட்சத்து 77 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது என முதன்மைகல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-14 19:00 GMT


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மானியமாக ரூ.1 கோடியே 44 லட்சத்து 77 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது என முதன்மைகல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

பள்ளி மானியம்

சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலுமுத்து விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மூலம் 2023-24-ம் கல்வியாண்டிற்கு தொடர் செலவினத்திற்காக பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி மானியம் அனைத்து அரசு பள்ளிகளின் பள்ளி மேலாண்மை குழு கணக்கிற்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 1,111 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு இக்கல்வியாண்டிற்கு பள்ளி மானியமாக ரூ.1 கோடியே, 44 லட்சத்து 77ஆயிரத்து 500 விடுவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம்

பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானிய தொகையில் 10 சதவீதம் பள்ளி வகுப்பறை மற்றும் வளாக தூய்மை, சுகாதாரமாக பராமரித்தல், கை கழுவும் வசதி ஏற்படுத்துதல், தூய்மையான குடிநீர், கழிப்பறை சுத்தம், மாணவர்களிடையே விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்நிதியினை பயன்படுத்துதல் வேண்டும்.

பள்ளிகளில் இயங்கா நிலையில் உள்ள உபகரணங்களை மாற்றவும், பள்ளியில் ஏற்படும் செலவினங்களான மின் கட்டணம், இணையம், ஆய்வக உபகரணம், குடிநீர், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் போன்றவற்றிற்கு இந்நிதியினை பயன்படுத்துதல் வேண்டும்.

மேலும் அரசு பள்ளி கட்டிடங்களின் கட்டமைப்பு வசதிகளான சுற்றுச்சுவர், தூய்மை இந்தியா திட்டத்தினை ஊக்குவித்திடவும் இந்நிதியினை பயன்படுத்துதல் வேண்டும். எண்ணும் எழுத்தும் மாணவர் பயிற்சி புத்தகங்களை வட்டார வளமையத்திலிருந்து பள்ளிக்கு எடுத்து செல்வதற்கான அசல் செலவினத்தை மேற்கொள்ளலாம்.

தேவை பட்டியல்

பள்ளி மேலாண்மை குழுவினர்களுடனும், ஆசிரியர்களுடனும் கலந்து ஆலோசித்து இக்கல்வியாண்டில் எந்தெந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற தேவை பட்டியல் தயாரித்து செப்டம்பர் 30-ந்தேதிக்குள் பள்ளிகளுக்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

எனவே கொடுக்கப்பட்ட தொகையை முறையாக செலவிட்ட பின் அது குறித்த விவரத்தை மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்