விவசாயி வீட்டில் ரூ.10 லட்சம் நகைகள் கொள்ளை
திருவெண்ணெய்நல்லூர் அருகே விவசாயி வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துசென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லூர்:
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பையூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருபாநிதி. விவசாயி. இவரது மகள் இந்துமதி(வயது 34). இவருக்கும், விழுப்புரத்தை சேர்ந்த பிரசன்னா என்பவருக்கும் திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு விக்னேஷ்வரி(12), ஷன்மதி(10) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்துமதி, தனது பெற்றோருடன் பையூரில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கிருபாநிதிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு குடும்பத்துடன் சென்றனர். நேற்று வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
நகை-பணம் கொள்ளை
இதை பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்து கிருபாநிதி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இந்துமதி வீட்டிற்கு வந்து பார்த்தார். பூஜை அறையில் இருந்த பீரோ உடைந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 25 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரத்தை காணவில்லை.
வீட்டில் ஆட்கள் இ்ல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகளையும், ரூ.50 ஆயிரம் ரொக்கத்தையும் கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது.
கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். மேலும் விழுப்புரம் தடயவியல் நிபுணர் சரவணன் நேரில் வந்து தடயங்களை சேகரித்தார்.
இந்த வழக்கில் துப்பு துலக்க விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் ராக்கி வர வைக்கப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டை மோப்பமிட்ட அது, சிறிது தூரம் வரை ஓடிச்சென்று நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இது குறித்து இந்துமதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மற்றொரு வீடு
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொங்கராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன் மனைவி ராகப்பிரியா(32). இவர், காந்திகுப்பம் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்றார். பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.